மது அடிமைகளைத் திருத்த நூறு வழிகள் முடிந்தவற்றைச் செய்யுங்கள்
மனைவி, தாய் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு
- மதுவுக்கு அடிமையானவரை உன்னிப்பாகக் கவனியுங்கள். நடை, உடை, பாவனைகளைப் பாருங்கள். அவரை ஆராய்ச்சி செய்யுங்கள். அவரிடம் என்னென்ன நல்ல குணங்கள் இருக்கின்றன என்று பாருங்கள். நல்ல குணங்களை மனதாரப் பாராட்டுங்கள்.
- அவர் கோணத்தில் பாருங்கள் (Empathy) பிறகு உங்கள் கோணத்தில் அவரைப் பார்க்க வையுங்கள். (Inverse Empathy).
- அவர் நல்ல காரியம் செய்யும் போது முழு மனதோடு பாராட்டுங்கள். இம்முயற்சிகளில் குடும்பத்தினர் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களையும் இணைய வையுங்கள்.
- அவர் அன்பாக நடந்துக் கொள்ளும் போது மகிழ்ச்சியைத் தெரிவியுங்கள்.
- கோபமாக நடந்துக் கொள்ளும் போது, உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். கோபம் மறைந்தவுடன் அவர் கோபத்தால் உங்களுஃக்கு ஏற்பட்ட பாதிப்பை அன்புடன் தெரிவியுங்கள்.
- அவர் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் அனைவரும் கொண்டாடுங்கள். பிறந்த நாள் கொண்டாடுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அனைவரும் கூடி எப்படிக் கொண்டாடுவது என்று திட்டம் தீட்டுங்கள். எளிமையாகக் கொண்டாடினாலும், ஆர்வத்துடன் கொண்டாடுங்கள்.
- அவர் யாருக்காவது உதவி செய்தால், உதவி பெற்றவரை நன்றியை நேரில் தெரிவிக்கச் சொல்லுங்கள். பாராட்டுக் கடிதம் எழுதச் சொல்லுங்கள். கடிதத்தை அவர் இருக்கும் போது குடும்ப உறுப்பினர்களை அழைத்து உரக்கப் படியுங்கள்.
- “அவருக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கிறதா” என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள். அதைப் போக்க முயற்சி செய்யுங்கள். மற்றவரிடம் இல்லாத சிறப்புகள் அவரிடம் ஏதாவது இருந்தால், அதைச் சுட்டிக்காட்டிப் பாராட்டுங்கள்.
- அவருக்கு எது துயரத்தை அளிக்கிறது என்பதைக் கண்டுபிடியுங்கள். துயரத்தைப் போக்க முயலுங்கள். முடியவில்லை என்றால், அவர் துயரத்தைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
- அவர் போதையில்லாதிருக்கும் போது, அவர் கடந்த காலச் சாதனைகளை, வெற்றிகளை நினைவுக் கூறுங்கள். அவர் பெற்ற வற்றிகளை நினைவூட்டுவதாக அது இருக்கும். அவர் பெற்ற சான்றிதழ்களை வரவேற்பறையில் தெரியும்படி வையுங்கள். அந்தச் சாதனைகளை அவர் எப்படிப் புரிந்தார் என்பதை அவர் இருக்கும் போது குழந்தைகளுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். அதை அவரையே விளக்கிக் கூறுமாறு வேண்டுங்கள்.
- சிறந்த அறிஞர்களின் பொன்மொழிகளை வீட்டின் சுவரில் அட்டையில் எழுதி மாட்டி வையுங்கள். அவர்களின் படங்களையும் மாட்டி வையுங்கள். பொன்மொழிகளின் கருத்துகளைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாரம் ஒருமுறை பொன்மொழிகளை மாற்றுங்கள், வேறு எழுதி வையுங்கள்.
- கடவுள் பக்தி உடையவராக இருந்தால் கடவுள் படத்தை மாட்டி வையுங்கள். மந்திரங்களை உச்சரிக்க ஊக்கப்படுத்துங்கள். கடவுள் வணக்கப் பாடல்களைச் சொல்லச் செல்லுங்கள்.
- அவர் குழந்தையாக இருந்த போது, மாணவராக இருந்த போது, இளைஞராக இருந்த போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை மலரும் நினைவுகளை உண்டாக்கும் வகையில் சட்டம் போட்டுத் தொங்கவிடுங்கள். கடந்த கால நல்ல நிகழ்ச்சிகளை அவரை நினைவுக்கூர வையுங்கள்.
- அவருக்கு நல்லனவற்றில் அல்லது தீமை பயக்காத செயல்களில் ஆர்வம் இருந்தால் அந்த ஆர்வத்திற்குத் தீனிப் போடுங்கள். சினிமா, விளையாட்டு, டி.வி., பார்ப்பது போன்றவற்றில் மதுவிற்கு அடுத்தப்படியாக ஆர்வம் இருந்தால் அந்த ஆர்வத்தை ஆதரியுங்கள். அதை அதிகரிக்கச் செய்யுங்கள்.
- மது அருந்த அழைக்கும் நண்பரை இங்கிதமாக வெட்டிவிடுங்கள். முடியவில்லையென்றால், அந்த நண்பரின் குடும்பத்தாரிடம் நட்பை வளர்த்து, நண்பர்கள் இருவரையும் திருத்த இரு குடும்பமும் இணைந்து புதிய உற்சாகத்துடன் செயல்படுங்கள்.
- தந்தை நிலைமையைக் கண்டு ஏங்கும் குழந்தைகளின் இயற்கையான வெளிப்பாட்டை நாசூக்காக அவருக்குத் தெரிவியுங்கள். அவர்களும் தவறான பாதையில் செல்லக்கூடிய ஆபத்திருக்கிறது என்பதை நயம்படக் கூறுங்கள்.
- மதுவால் அழிந்தவர்களின் கதைகளைச் சோகத்துடன் தெரிவியுங்கள். முடிந்தால் அவர்களை விட்டே கூற வையுங்கள்.
- திருந்தி மறுவாழ்வு பெற்ற மது அடிமைகளின் கதைகளை உற்சாகத்துடன் கூறுங்கள். அவர்களையே வந்து பகிர்ந்து கொள்ளச் செய்யுங்கள்.
- நம்பிக்கையிருந்தால் அடிக்கடி கூட்டுப் பிரார்த்தனை அவருடன் சேர்ந்து செய்யுங்கள். கோயிலுக்கு அவருடன் அடிக்கடி செல்லுங்கள்.
- குடிக்கும் நேரத்தில் மனதை வேறுபக்கம் திருப்ப முயற்சி செய்யுங்கள். ஏதாவது முக்கிய பணியைத் தாருங்கள். அவருக்குப் பிடித்த வேலையைக் கொடுங்கள்.
- தாய்நாட்டுப் பற்று உண்டாகும் வகையில் பேசுங்கள்.
- இயற்கையின்பால் பற்று வரும் வகையில் கலந்துரையாடுங்கள். சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகள் பற்றிப் பேசுங்கள். அவைகளை எப்படி தடுப்பது என்று அவர் யோசனையைக் கேளுங்கள்.
- சமுதாயத்தில் நசுக்கப்படும், பாதிக்கப்படும் மக்களைப் பற்றிப் பேசுங்கள். அவர்களுக்கு இணைந்து உதவ அவரை அழையுங்கள்.
- காசு கேளாதோர், பார்வையில்லாதோர், பேச முடியாதோரய, உடல்நலம் குன்றியவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் மறுவாழ்வு இல்லங்கள், பள்ளிக்கூடங்களுக்கு அவரை அழைத்துச் செல்லுங்கள். பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் உண்டாகும் நிலையை உருவாக்குங்கள். சேர்ந்து சென்று அவர்களுக்குத் தொண்டு செய்யுங்கள்.
- தியானம் செய்யக் கற்றுக் கொடுங்கள். கூட்டுத் தியானம் செய்யுங்கள்.
- சேர்ந்து யோகா செய்யுங்கள்.
- சேர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்.
- உள்மனத்தை எழுப்பி அதில் நல்ல கருத்துங்கள் பதியும் வகையில் அந்த அறிதுயில் நிலையில் (Hypnotic State) கூற்றுமொழி (Suggestion) கூறி அவரை மாற்றுங்கள்.
- ஏழை மாணவர்களுக்கு உங்கள் வீட்டில் டியூசன் சொல்லிக் கொடுங்கள். அந்தப் பணியில் அவரை ஈடுபடுத்துங்கள்.
- சதுரங்கம் (Chess) , கேரம் (Carrom) போன்ற விளையாட்டுகளை வீட்டில் அவருடன் சேர்ந்து விளையாடுங்கள்.
- சிறந்த தலைவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தின் புத்தகத்தை வாங்கி அவரைப் படிக்கச் சொல்லுங்கள். நீங்களே படித்து அதன் சாற்றைச் சுவைப்பட வழங்குங்கள். அதில் கூறப்பட்டிருக்கும் நல்ல கருத்துக்களை விளக்கும் பணியை அவருக்குத் தாருங்கள். இருவரும் விவாதியுங்கள்.
- சுயவளர்ச்சிச் சொற்பொழிவு, பயிற்சி வகுப்பு ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
- மனதைத் தூய்மைப்படுத்தும், அறிவை வளர்க்கும், அறிஞர்களின் உரையை வானொலியில் / தொலைக்காட்சியில் காலை நேரம் சேர்ந்து கேளுங்கள், காணுங்கள்.
- உத்வேகப்படுத்தும், இலட்சிய வெறி உண்டாக்கும் திரைப்படங்களைப் பாருங்கள்.
- உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், கண்ணதாசன் போன்றவர்களின் கருத்தாழமான திரைப்படப் பாடல்களை வீட்டில் ஒலிக்கச் செய்யுங்கள்.
- வெளியூர்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது அவரை அழைத்துச் செல்லுங்கள். எப்போதாவது பொழுது போக்குத் தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
- முக்கியப் பொறுப்புகளை, பணிகளைத் தாருங்கள். அதை அவரால் செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கையை அடிக்கடி அளியுங்கள்.
- குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி அவருடன் சேர்ந்து திட்டம் தீட்டுங்கள்.
- பள்ளியில் நடக்கும் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களுக்குத் தவறாமல் அவரை அழைத்துச் செல்லுங்கள்.
- ஆசிரியர் உங்கள் குழந்தைகள் பற்றிச் சொன்ன நல்ல, கெட்ட விவரங்களை அவர் மூலமே குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துங்கள். அவரை விட்டே, குழந்தைகளுக்கு அறிவுரை வழங்குங்கள். குழந்தைகள் “பிராக்ரஸ் ரிப்போர்ட்”டில் அவரைக் கையெழுத்திட வையுங்கள். குழந்தைகள் மதிப்பெண் குறைவாக இருந்தால், அவரையே அவர்களுக்கு அறிவுரை வழங்கச் சொல்லுங்கள்.
- அவருக்குப் பிடத்த உணவு வகைகளை அடிக்கடிச் செய்யுங்கள். சமைக்கும் போதே அவரையும் உதவிக்கு அழையுங்கள். அவர் சமைத்த உணவு நன்றாக இருந்தால் அனைவரும் கரவொலி எழுப்பிப் பாராட்டுங்கள்.
- வீட்டைத் தூய்மையாகவும், பசுமையாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ளுங்கள். மனதிற்குச் சுகமளிக்கும் வண்ண நிறங்களைச் சுவரில் தீட்டுங்கள். மனதிற்கு இதமளிக்கும் வண்ண ஓவியங்களைச் சுவரில் மாட்டி வையுங்கள். பூங்கொத்தை ஜாடியில் வைத்து அழகூட்டுங்கள். வீட்டிற்குள் இடம் இருந்தால் தோட்டம் போடுங்கள். மாடித்தோட்டம் போடுங்கள், இப்பணியைச் செய்ய அவரையும் அழையுங்கள். வீட்டை மகிழ்ச்சி தரும் இடமாக மாற்றுங்கள். அப்பணிகளில் அவரை ஈடுபடுத்துங்கள்.
- வீடு மன அமைதி தரவில்லையென்றால் வேறு வீட்டிற்குக் குடிப்பெயருங்கள்.
- அவர் யார் மீது அதிக மதிப்பு வைத்திருக்கின்றாரோ அவரை அழைத்து அறிவுரை வழங்க வையுங்கள். அறிவுரை வழங்குபவரை அடிக்கடி வந்து அவரிடம் பேச வையுங்கள்.
- அவருக்குப் பிடித்த பொருள், கருவி, கருத்து முதலியன எவை என்று கண்டுபிடித்து (உம். தமிழ்ப்பற்று) அதை அடிக்கடிப் பேசுங்கள். அவை தொடர்பான உங்கள் ஆர்வத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
- மதச்சடங்குகளில் நம்பிக்கை இருந்தால் அடிக்கடி செய்யுங்கள்.
- அவர் மது அருந்தும் நேரத்திற்கு முன்னால், அவருக்குப் பிடத்த உணவைச் சுவையாகச் சமைத்து அவரை வயிறு நிறையச் சாப்பிட வைத்துவிடுங்கள்.
- வீட்டில் மன அமைதி தரும் மெல்லிய ஒலிப்பேழை இசையை மூலம் எப்போதும் ஒலிக்கச் செய்யுங்கள்.
- மனோதத்துவ நிபுணர்கள் உதவியை நாடுங்கள். அவருக்குக் கவுன்சிலிங் செய்யச் சொல்லுங்கள். மது எப்படி உடலைப் பாதிக்கிறது என்பதை எடுத்துக் கூறச் சொல்லுங்கள்.
- மனநல மருத்துவர்கள் உதவியை நாடுங்கள்.
- அவருடைய பழைய பள்ளி, கல்லூரி ஆசிரியர் உதவியை நாடுங்கள். அவர்களை உரிமையுடன் உபதேசம் செய்யச் சொல்லுங்கள்.
- அவர் ஓவியம் தெரிந்தவராக இருந்தால், அவரை ஓவியம் வரையச் சொல்லுங்கள். அவர் வரைந்த ஓவியத்தைச் சுவரில் மாட்டுங்கள். நண்பர்கள், உறவினர்கள் வந்தால் இது அவர் வரைந்தது என்று மகிழ்ச்சியுடன் சொல்லுங்கள்.
- பாடத் தெரிந்தவராக இருந்தால் அவரை அடிக்கடி பாடச் சொல்லுங்கள். அவர் பாடும் போது உங்கள் இரசனையை முகத்தில் வெளிப்படுத்துங்கள்.
- இசைக்கருவிகள் இசைக்கத் தெரிந்தவராக இருந்தால், இசைக்கச் செய்து இன்புறுங்கள். உடனுக்குடன் அதை பாராட்டுங்க்கள். ஓலிநாடாவில் பதிவு செய்து ஒலிக்கச் செய்யுங்கள்.
- வீட்டில் ஒவ்வொருவரும் அவருக்காச் செய்யும் தியாகங்களைத் தெரியப்படுத்துங்கள். அவர் காதில் முறையாக விழ வையுங்கள்.
- பெற்றவர்கள் ஏக்கத்தைத் தெரியப்படுத்துங்கள். இவர் முன்னேற்றத்திற்கு அவர்கள் செய்த தியாகங்களை நினைவுப்படுத்துங்கள்.
- நல்ல நண்பர்கள், பழைய வகுப்புத் தோழர்களை விட்டு நல் உபதேசம் செய்ய வையுங்கள்.
- மதுவால் உயிர் இழந்தவர்கள், பார்வை இழந்தவர்கள், நடைப்பிணமானவர்கள், முடங்கிப் போனவர்கள் போன்றவர்களின் கதைகளை அவர் நல்ல மன நிலையில் இருக்கும் போது கூறுங்கள்.
- சிறிது நேர மகிழ்ச்சிக்காக மது அருந்தி வாழ்நாள் முழுவதும் செயல் இழந்து இருட்டில் தவிப்பவர்களின் கதைகளைக் கூறுங்கள்.
- அவர் மது அருந்துவதால் குடும்பத்திற்கு உண்டாக இருக்கும் பிரச்சினைகளைப் பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள்.
- அவர் மது அருந்தவில்லையென்றால் ஏற்படும் நல்விளைவுகளை நயம்பட எடுத்துச் சொல்லுங்கள்.
- ஒரு மகிழ்ச்சிக்காகக் குடும்பமே சோகத்தில் ஆழ்வது சரியா என்பதை உரிமையுடன் கேளுங்கள்.
- நல்லவர்கள்கூட போதையின் காரணமாகத் தங்களையே மறந்து குற்றங்கள் புரிந்து தண்டனைக்குள்ளான உண்மை நிகழ்ச்சிகளைத் தெரிவியுங்கள். மது அரக்கனால் கொலை செய்தவர்கள், கொள்ளையில் ஈடுபட்டவர்கள், பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் ஆகியோரைப் பற்றிக் கூறுங்கள். பிறகு தங்கள் செயலுக்காக எப்படி வருந்தினார்கள் என்பதை எடுத்துச் சொல்லுங்கள். முடிந்தால் அவர்களை விட்டே அவர்கள் துயர அனுபவத்தைக் கூற வையுங்கள்.
- மது அருந்தி விபத்துக்குள்ளானவர்கள், அவர்களால் உயிர் இழந்தவர்கள் பற்றிச் சொல்லுங்கள்.
- பணிபுரியும் இடத்தில் உடன் பணிபுரிபவர்கள், மதுவிற்கு அடிமையாகி இவரையும் அவர்கள் மது அடிமையாக்கும் சூழ்நிலை ஏற்படும் ஆபத்து இருந்தால், அவருடன் மது அருந்தும் சக அலுவலர் மனைவியுடன் நட்புண்டாக்கி அவர்களுடன் கூட்டணி அமைத்து, அனைவரையும் திருத்த முயலுங்கள். முடிந்தால் இவரை வேறு இடத்திற்கு மாற்றம் பெற முயலுங்கள்.
- மதுவால் தங்கள் வேலையை இழந்தவர்கள் கதையைக் கூறுங்கள். அவர்களையே கூறச் சொல்லுங்கள்.
- உங்கள் குடும்பத்தின்பால் உண்மையில் பற்றும் பாசமும் உள்ள ஒரு சிலரை அவருக்கு நெருங்கிய நண்பர்களாக்கி அவர்களை உரிமையுடன் அவரைத் திருத்த முயற்சி எடுக்கச் சொல்லுங்கள்.
- மரக்கன்றுகள் நடும் பணியை அவருக்குத் தாருங்கள். அதைப் பராமரிக்கும் பணியை அவரிடம் ஒப்படையுங்கள். அவருடைய முயற்சியால் ஆக்கப்பூர்வமான பணிகளால் மரம் வளர்வதைச் சுட்டிக்காட்டி உங்களுடைய பாராட்டினைத் தெரிவியுங்கள்.
- காலை நேரத்தில், நடக்கும் பயிற்சி செய்வது ஒரு நல்ல பழக்கமாக அமையும். அதிக நேரம் நடந்தால் தூக்கம் வரும். நல்ல தூக்கம் கவலைகளை மறக்கச் செய்யும். நடக்க எடுத்துக் கொள்ளும் நேரம், மது அருந்தும் நேரத்தைக் குறைக்கும்.
- அவர் உங்களின் ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கு சரியான ஒத்துழைப்புத் தரவில்லையென்றால், சிறிய போராட்டத்தினைக் காந்திய வழியில் தொடங்குங்கள். அவர் உணரும் வகையில் ஒருவேளை உண்ணாவிரதம் இருங்கள்.
- அவர் ஒவ்வொரு முறையும் மது அருந்தும் போது, அவருக்குத் தெரியும் வகையில் சிறய தண்டனைகளை உங்களுக்கு நீங்களே அளித்துக் கொள்ளுங்கள். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் போது வீட்டில் உள்ள அனைவரும் அவர் மீது அன்பைப் பொழியுங்கள். அவர் மீது அக்கறைக் காட்டுங்கள். மனதை நெகிழ வையுங்கள்.
- அதிகாலையில் எழுந்துக் கொள்ளும் நேரத்தில் வெளிமனம் இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கும். உள்மனம் விழித்துக் கொண்டிருக்கும். அப்பொழுது “மது வேண்டாம்” (Affirmations) உறுதிமொழி எடுத்துக் கொள்ளச் சொல்ங்கள். தனக்குத் தானே கூற்றுமொழிகள் (Auto Suggestions) கூற வையுங்கள்.
- படுக்கையில் இருந்து எழுந்தவுடன் அரைத் தூக்கத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியில் அவர் கண்களை அவரே பார்க்கச் செய்து உள்மனம் பதியும் வண்ணம் உறுதிமொழி ஏற்க வையுங்கள்.
- குழந்தைகளை அவருடன் விளையாடச் செய்யுங்கள். குழந்தைகளிடம் அவரை ஒரு குழந்தையாக மாறச் சொல்லுங்கள்.
- அவருடைய பிறந்த நாளன்று அவருடைய சிறந்த குணங்களையும், செயல்களையும் ஒரு சிறுதாளில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக எழுதச் சொல்லி அந்தத் தாள்களை ஒரு அட்டையில் ஒட்டிச் சுவரில் தொங்கவிடுங்கள். பிறந்தநாள் வாழ்த்துகளையும் எழுதி வையுங்கள்.
- பளு தூக்குதல், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடல்நலம் காக்கும் பயிற்சிகளில் அவரை முழுமையாக ஈடுபடுத்துங்கள்.
- திருமண நாளன்று பரிசு கொடுங்கள். உங்களுக்கு அவர் பதில் பரிசு தர வேண்டுமென்ற எண்ணத்தை உருவாக்குங்கள். அவருடைய நல்ல குணங்கள் எப்படி உங்களை மகிழ்விக்கிறது என்று கூறுங்கள்.
- ஒரு டைரி கொடுத்து அன்றாடம் அவர் செய்யும் நல்ல செயல்களை எழுதச் சொல்லுங்கள். அதை மாதந்தோறும் படிக்கச் சொல்லுங்கள்.
- வீட்டில் அனைவரும் நகைச்சுவை உணர்வோடு பேசுங்கள், சிரிப்புத் துணுக்குகளைச் சேகரித்துப் பேசிச் சிரிப்பலை எழுப்புங்கள். அனைவரும் மனம் விட்டுச் சிரியுங்கள். “வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்”. அனைவருக்கும் பொதுவான மொழி “புன்னகை” தேவை என்பதை மறந்துவிடாதீர்கள்.
- வீட்டிலேயே அடிக்கடி பட்டிமன்றம் நடத்துங்கள். நீங்கள் ஒரு கருத்திற்காகவும் மற்ற கருத்திற்காக அவரையும் வாதாடச் சொல்லுங்க்கள். மற்றவர்களை நீதிபதிகளாக இருக்கச் சொல்லுங்கள். பட்டிமன்ற நேரத்தை நீட்டியுங்கள்.
- மது அருந்துவதால் உயிருக்கு ஏற்படும் ஆபத்தைப் பல வழிகளிலும், பலர் மூலமாகவும் தெரியப்படுத்துங்கள்.
- மது அருந்துவதற்கு முன் அவர் இருந்த புகைப்படத்தையும், மது அருந்தும் பழக்கம் ஆரம்பித்த பிறகு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் (Before & After) அருகருகே ஓர் அட்டையில் ஒட்டிப் படுக்கையறையில் மாட்டி வையுங்கள். மதுவின் தீமையைப் படங்கள் எடுத்துக்காட்டும். படங்கள் மனதை மாற்றும்.
- வேறு ஏதாவது கெட்ட பழக்கங்கள் உள்ளவர்கள் யாராவது ஆலோசனை பெற விரும்பினால் இவரை விட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கச் சொல்லுங்கள்.
- பார்வை இல்லாதவர்களுக்குப் படித்துக் காட்டும் (Reading for the Blind) பணியை இவருக்குத் தாருங்கள்.
- ரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள். இரத்ததானம் செய்யச் சொல்லுங்கள். (ஏனெனில், மது அருந்துபவர்கள் இரத்ததானம் செய்ய சில கட்டுப்பாடுகள் உண்டு).
- அன்றாடம் ஒரு நிமிட காந்தியாகவும், பத்து நிமிட அன்னை தெரசாவாகவும் இருக்கச் சொல்லுங்கள். ஒரு நிமிட காந்தி என்பது அன்றாடம் ஒரு நல்ல கருத்தைப் படிப்பது, சிந்திப்பது. பத்து நிமிட தெரசா என்பது ஒரு சிறிய உதவியை அன்றாடம் யாருக்காவது எப்படியாவது செய்வது. இதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வையுங்கள். அவர் செய்து முடித்தவுடன் பாராட்டுங்கள். ஒவ்வொரு நாளும் அவருடைய ஒரு நிமிட காந்தி சிந்தனையையும், பத்து நிமிட தெரசா பரோபகாரப் பணியையும் டைரியில் அந்தந்த தேதிக்குரிய பக்கத்தில் எழுதச் சொல்லுங்கள். அதன்பிறகு அடிக்கடிப் படித்துப் பார்க்க வேண்டுங்கள். மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வையுங்கள்.
- தபால் தலைகள், நாணயங்கள் போன்றவற்றைச் சேகரிக்கும் பழக்கத்தைப் பொழுது போக்காக அவருக்கு அறிமுகப்படுத்துங்கள்.
- யாருக்காவது பிரச்சினையெ என்றால் நடுவராக இருக்கச் சொல்லுங்கள்.
- வேறு யாராவது சிறந்த காரியங்களைச் செய்யும் போது இவரை விட்டுப் பாராட்டச் சொல்லுங்கள்.
- வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் வாரம் ஒருநாள் கை கோர்த்து “நாங்கள் நல்ல பாதையைக் கண்டறிந்து தேர்ந்தெடுத்து நல்லவர்களாகவே வாழ்வோம்” என்று கூட்டு உறுதிமொழி எடுங்கள்.