நிர்மல் 7-ஆம் அறிவு © அறிமுகம்
7-ஆம் அறிவு அற்புத நுணுக்கங்கள்
இதோ நிர்மல் 7-ஆம் அறிவு அறிவு பாடங்கள்
உங்கள் வாழ்க்கையின் இலட்சியம் என்ன? – கால் டாக்ஸி உதாரணம்
ஒரு கால்டாக்சியில் ஏறுகிறீர்கள். உடனே ஓட்டுனர் கேட்பார், “எங்கே போக வேண்டும்?” என்று. நீங்கள் போக வேண்டிய இடத்தின் பெயரை சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் அவர் உங்களை அழைத்து செல்வார். “நீ எங்கேயாவது போ” என்று சொன்னால், டாக்ஸி ஓட்டுனர் உங்கள் மீது கோபப்படுவார்.
ஆழ்மனதின் சக்தியைப் பற்றி உங்களிடம் கூறியிருந்தோம். எப்படி ஒரு கராத்தே வீரர் கற்களை கைகளால் உடைக்கிறார்? ஒரு பெண் எப்படி தன் வாயால் கயிறுகளைப் பிடித்துக் கொண்டு வண்டிகளை இழுக்கிறார்? யோக நிலையில் எப்படி உடல் மேலே எழும்புகிறது? இவற்றைப் பற்றியெல்லாம் விளக்கமாக குறிப்பிட்டிருந்தோம். இதன் அடிப்படை கருத்து என்னவென்றால் ஆழ்மனது உங்களுக்குள் இருக்கும் பூதம்.
உங்களுக்குள் இருக்கும் கால்டாக்ஸி ஓட்டுனர். அந்த கால்டாக்ஸி ஓட்டுனர் உங்கள் கட்டளைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் உங்கள் ஆழ்மனது என்ற ஓட்டுனரிடம் “நான் இத்தனை ஆண்டுகளில் இத்தகைய நிலையை அடைய வேண்டும்” என்று கூறினால் அந்த ஆழ்மனது ஓட்டுனர் உங்களை அந்த நிலைக்கு உயர்த்தி எடுத்து செல்வார். ஆனால் நீங்கள் எதுவுமே சொல்லவில்லையென்றால் அந்த ஓட்டுனர் நகரமாட்டார். நீங்கள் வாழ்க்கையில் தேக்க நிலையிலேயே இருப்பீர்கள்.
கால்டாக்ஸி ஓட்டுனருக்கும், ஆழ்மனது ஓட்டுனருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. கால்டாக்ஸி ஓட்டுனரிடம், “ஒரு பள்ளத்தில் சென்று விடு என்றால்” அதை அவர் செய்யமாட்டார். “ஒரு மரத்தின் மீது மோதிவிடு” என்று சொன்னால் அதையும் அவர் செய்யமாட்டார். ஆனால், ஆழ்மனது அப்படிபட்டது அல்ல. ஒருவர் மீது நீங்கள் வெறுப்பை வளர்த்துக் கொண்டால், ஆழ்மனது உங்கள் மூலமாக அவரை பழிவாங்கும். ஏன் கொலை செய்யக்கூட தூண்டும். ஆழ்மனது ஒரு கத்தியைப் போன்றது. கத்தி நல்லதா? என்பது கத்தியைப் பொறுத்தது அல்ல. அதை பயன்படுத்துபவர்களைப் பொறுத்தது. எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தது. ஒரு மருத்துவரிடம் சென்றால், அந்த கத்தி உயிர் காப்பாற்ற பயன்படுத்தப்படும். ஒரு கொலைக்காரனிடம் அந்த கத்தி சென்றால், ஒரு உயிரை பறிக்க பயன்படுத்தப்படும். ஏன், அந்த கத்தியின் மூலம் காய்கறி நறுக்கி நல்ல உணவு சமைக்கலாம். புறமனதிற்கு நல்லது, கெட்டது சீர்தூக்கி பார்க்கத் தெரியும். ஆழ்மனதிற்கு பாகுபாடு கிடையாது. அதனிடம் எதை நாம் சொன்னாலும் நாம் கூறியதை பன்மடங்கு பெரியதாகிவிடும். அது ஒரு விளைநிலம் போன்றது. விளைநிலம் என்ன விதைகளை விதைக்கிறார்கள்? என்பதை பற்றி கவலைப்படுவது இல்லை. அங்கு நெல்லும் விளைய வைக்கலாம். வேர்கடலையும் பயிரிடலாம். முட்செடிகளும் பயிரிடலாம். ஏன் உயிரினங்கள் உண்ணும் ………………….. செடியைக்கூட பயிரிடலாம்.
ஒரு குளத்தில் கல்லை எறிந்தால் அங்கு தண்ணீர் வட்டம் உருவாகி அந்த வட்டம் பெரியதாகிக் கொண்டே போகும். ஒரு சிறிய விதைதான் பெரிய ஆலமரமாகிறது. அனைவரும் ஆழ்மனதிடம் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டும். ஆழ்மனதுடன் நீங்கள் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடிய பொருத்தமான நேரம் அதிகாலைதான். இதை பெண்கள் அனைவரும் உணர்ந்து தங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், மது அடிமைகளான ஆண்களை மாற்றுவதற்கும் இந்த நுணுக்கங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தாய்மார்கள் இந்த நுணுக்கங்கள் அனைத்தையும் தங்கள் குழந்தைகளுக்கு விளக்கி அவர்களை நல்ல முறையில் வாழ்க்கையில் முன்னேற வழிகாட்ட வேண்டும். குழந்தைகள் தவறான பாதையில் போகாமல் இருக்க இவை உதவும்.
உங்கள் இலட்சியத்தை ஒரு வாக்கியமாக எழுதுங்கள்
உங்கள் எதிர்கால இலட்சியத்தை வாக்கியமாக எழுதும் போது கீழ்கண்ட தேவைகளை உள்ளடக்கியதாக அமையுங்கள்.
ஏழு தேவைகள்:
- பணம்
- ஒழுக்கம்
- திறமைகள்
- உடல்நலம்
- சாதனைகள்
- மகிழ்ச்சி
- மன அமைதி
உங்களுடைய இலட்சிய வாக்கியம் எப்படி இருக்க வேண்டும்?
- எளிமையாக இருக்க வேண்டும்.
- நேரிடையாக இருக்க வேண்டும்.
- ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும்.
- எதிர்மறை சொல் இருக்கக் கூடாது.
- இரண்டு எதிர்மறை சொல்களும் இருக்கக் கூடாது.
- அதில் சார்பு சொல்களைச் சேருங்கள்.
- அந்த வாக்கியம் நிகழ்காலத்தை குறிப்பதாக அல்லது நடப்பதாக இருக்க வேண்டும்.
நுணுக்கம் 1
படுக்கை உறுதிமொழி
அதிகாலையில் நீங்கள் எழுந்திருக்கும் போது ஆல்பா நிலையில் இருப்பீர்கள். அப்பொழுது கண்களைத் திறக்காமல் உங்கள் எதிர்கால இலட்சியத்தை குறைந்தது ஐந்து முறையாவது மனதிற்குள்ளேயே கூறிக் கொள்ளுங்கள். இதற்கு அதிகபட்சம் ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்கள் வரை தேவைப்படலாம்.
கணவர் மது அடிமையாக இருந்தால், “என் கணவர் நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்டவர். என் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று ஐந்தாறு முறை மனதிற்குள்ளேயே கூறிக்கொள்ளலாம். ஆழ்மனது என்பது ஒரு பூதம். சர்வ வல்லமை படைத்தது அது. அதனிடம் எதை கூறினாலும் அது நடக்கும். நல்லது கூறினாலும் நல்லது நடக்கும். கெட்டது கூறினாலும் கெட்டது நடக்கும். எப்பொழுது கூறலாம்? அது விழித்துக் கொண்டிருக்கும் போது. அது எப்பொழுது விழித்துக் கொண்டிருக்கும்? புறமனது விழித்துக் கொள்ளாத நிலையில் இருக்கும் பொழுது. அதாவது தூக்கம் கலையாத நிலையில். ஒவ்வொரு நாளும் காலையில் தூக்கம் கலையும் பொழுது நாம் அந்த நிலையில் இருப்போம். அதற்குப் பெயர் “ஆல்பா”. ஒரு சில மணித்துளிகளே அந்த நிலையில் இருக்கும். இதை “தீ” பெண்கள் மட்டும் அல்லாது, மதுவிற்கு அடிமையானவர்களும் இந்த நுணுக்கத்தைப் பயன்படுத்தலாம். “நான் ஒழுக்கமானவன். நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டவன்” என்பதை தங்களுக்குத் தாங்களே அவர்கள் கூறிக்கொள்வார்கள்.
ஒரு முன்மாதிரி இலட்சிய வாக்கியம்
“நான் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவராக, உடல்நலத்துடன், அளவற்ற மகிழ்ச்சியுடன், செல்வத்துடன், ஒழுக்கத்துடன், திறமையுடன் வாழ்ந்து வருகின்றேன்.
மிகச்சிறந்த இலட்சிய வாக்கியம், “ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதத்திலும் நான் வாழ்க்கையில் முன்னேறி கொண்டு இருக்கிறேன்”.
“எனக்கு பணக்கஷ்டம் இல்லை” என்று சொல்லக்கூடாது. “நான் பணக்காரனாக வாழ்கிறேன்” என்று சொல்ல வேண்டும். “எனக்கு சர்க்கரை வியாதி இல்லை” என்று சொல்லக் கூடாது. “என் கணையம் தேவையான அளவிற்கு இன்சுலினை தருகின்றது” என்று சொல்ல வேண்டும்.
“எனக்கு சர்க்கரை வியாதி இல்லை” என்று கூறினால் ஆழ்மனது அதை தவறாக புரிந்துக் கொண்டு நீங்கள் “சர்க்கரை வியாதியை நாடுகிறீர்கள்” என்று கருதி உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும்.
நுணுக்கம் 2
மனத்திரையிலே வருங்கால வெற்றிக் காட்சியை இப்பொழுதே காண்பது (Creative Visualisation)
எப்படி திரையரங்களிலே திரை இருக்கிறதோ, தொலைகாட்சிக்கு திரை இருக்கிறதோ அதே போன்று மனதிற்கும் திரை உண்டு. மனத்திரை என்பது ஆழ்மனதிற்கு நெருக்கமானது. நாம் மனத்திரையில் எதைப் பார்த்தாலும் அது ஆழ்மனதில் ஆழமாக அழுத்தமாக பதிந்துவிடும். ஆக, உங்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கைத் தேவையென்றால் உங்கள் மகிழ்ச்சியான முகத்தை மனத்திரையிலே பார்க்க வேண்டும். நீங்கள் மற்றவர்களுடன் மகிழ்ச்சியுடன் பேசுவதை காதால் கேட்க வேண்டும். அதை உடலால் உணர வேண்டும். நம் உடலில் பல்லாயிரக்கணக்கான கோடி உயிரணுக்கள் இருக்கின்றன. “குளோனிங்” என்ற முறைப்படி ஒரு உயிருடைய உயிரணுவை (cell) எடுத்து அதேப்போன்று இன்னொரு உயிரினத்தை உருவாக்கிவிடலாம். அதாவது உங்கள் உடலில் இருக்கும் செல்லை எடுத்து, உங்களைப் போன்றே இன்னொரு மனிதரை உருவாக்கிவிடலாம். இது உண்மை.
ஆகவே, நீங்கள் நல்ல வார்த்தைகளை மற்றவர்களைப் பார்த்துக் கூறும் பொழுது, அந்த நல்ல வார்த்தைகள் உங்கள் உடம்பில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான உயிரணுக்களும் (Cells) கேட்கின்றன. உதாரணமாக, நீங்கள் ஒருவரைப் பார்த்து “வாழ்க வளமுடன்” என்றால், அது நிச்சயமாக உங்கள் உடம்பில் உள்ள உயிரணுக்களின் காதில் விழுகின்றன. ஆகவே அது உங்களுக்கு நன்மை பயக்கும். அதே நேரத்தில் “நாசமாகப் போ” என்று யாரையாவது பார்த்துக் கூறினால், அதுவும் உங்கள் செல்கள் காதில் விழுகின்றன. ஆகவே அது உங்களைப் பாதிக்கும். ஆக வாழ்க்கையில் எந்த இலட்சியத்தையும் நீங்கள் மேற்கொண்டாலும் அதற்குரிய வருங்கால வெற்றிக்காட்சியை உங்கள் மனதில் பார்க்க வேண்டும். அதற்குரிய ஒலிகளை உங்கள் காதுகளால் கேட்க வேண்டும். அவற்றை உடலால் உணர வேண்டும். இதே நுணுக்கத்தை நீங்கள் திருத்த நினைக்கும் மது அடிமைக்கும் சொல்லித் தரலாம். அதன் மூலம் எளிதாக மதுவை அவர் விட்டுவிடலாம்.
அதாவது நீங்கள் நாசமாக போக நீங்களே விரும்புவதாக செல்கள் தவறாக புரிந்துக் கொள்ளும். உங்கள் அழிவிற்கு அது வழிவகுக்கும். ஆகவேதான் நமக்கு அழிவு சிந்தனையே கூடாது. எதிர்மறை சொற்களைப் பயன்படுத்தக்கூடாது.
மருத்துவ விஞ்ஞானத்தின் உச்சக்கட்டம்:
உங்களுக்குத் தெரியுமா? ஒரு தாய் தன் குழந்தையை பிரசுவித்தவுடன் அக்குழந்தையின் தொப்புள் கொடியை பத்திரமாக எடுத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து, பிற்காலத்தில் அவளுக்கோ அல்லது அவள் குழந்தைக்கோ கேன்சர் போன்ற கொடிய நோய்கள் உண்டானால், அந்த தொப்புள் கொடியில் இருக்கும் பல்லாயிரக்கோடி செல்களிலிருந்து ஒரே ஒரு செல்லை எடுத்து உடலில் செலுத்தினால் போதும். நோய் குணமாகிவிடும். பழுதுபட்ட உறுப்பு குணமடைந்துவிடும்.
என்னுடைய அருமை நண்பர், எக்ஸ்னோராவின் தலைமை ஆலோசகர் திரு.எஸ்.அபயக்குமார் அவர்கள் “LifeCell” என்ற மருத்துவ ஆராய்ச்சி நிலையமும், பரிசோதனைக்கூடமும் நடத்தி வருகிறார். இதுவரை 85 பேர்கள் அவர்கள் கால்கள் பழுதடைந்து அதை வெட்டி எடுக்க வேண்டிய நிலையிலே அவர்கள் உடலில் இருந்தே ஒரு உயிரணுவை எடுத்து (Bonemarrow) அந்த பழுதப்பட்ட காலிலே செலுத்தி அந்த கால் குணமாகி 85-லிருந்து 73 பேர் மருத்துவமனையில் இருந்து நடந்தே சென்றார்கள் என்ற செய்தி உங்களுக்கு ஆச்சரியத்தை தருகிறது அல்லவா!
அதனால் “தீ” அமைப்பு பெண்களில் எவரது காலாவது பழுதாகி அதை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக சென்னை, போரூரில் இராமசந்திரா மருத்துவமனையை தொடர்புக் கொள்ளவும். அந்தக் கால் முழுமையாக பழுதுப்படவில்லையென்றால் 90% அந்தக் காலை குணப்படுத்திவிடலாம்.
ஆக, விஞ்ஞானப்பூர்வமாக நிருபிக்கப்பட்ட இச்செய்திகளிலிருந்த உங்களுக்கு தெரிய வேண்டியது என்னவென்றால் ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள். ஆக்கப்பூர்வமாக பேசுங்கள். ஆக்கப்பூர்வமாக நடந்துக் கொள்ளுங்கள். இல்லத்திலே “Mutual Motivators club” என்று ஒன்றைத் தொடங்குங்கள். அனைவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகத்தான் பேச வேண்டும். தாழ்த்தி பேசக்கூடாது. மட்டம் தட்டக்கூடாது என்ற நிலைமையை உண்டாக்குங்கள். அப்பொழுது உங்கள் இல்லமே ஆக்கப்பூர்வமான இல்லமாக மாறிவிடும்.
ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு “நிர்மல் ஏழாவது அறிவின்” கண்டுபிடிப்பு என்னவென்றால், நம்முடைய ஜன்னல்களே. நம்முடைய ஜன்னல்கள் சரியாக இருந்தால் நம் சிந்தனைகள் மாறுபடும். இதுகுறித்து இணையத்தளத்தில் நிர்மலின் “உங்கள் ஜன்னல்கள் மூலம் வாழ்க்கையை மாற்றுங்கள்” என்ற பேரூரையை கேட்போம். வாழ்க்கை உங்களை அடியோடு மாற்றிவிடும். (Collect photos from lifecell jaya )
நுணுக்கம் 3 – நிலைக்கண்ணாடி பேச்சு (Mirror Talk)
காலையில் எழுந்தவுடன் முகம் பார்க்கும் கண்ணாடியில் தன் கண்களை நேருக்கு நேர் சந்தித்துத் “தனக்குத் தானே கூற்று மொழி”களைக் கூறலாம். உறுதிமொழிகளைக் கூறிக் கொள்ளலாம். அப்போது அந்நிலையில் தனக்குத்தானே கூறிக்கொள்ளும் கூற்றுகள், பசுமரத்தில் அடித்த ஆணியாக உள்மனத்தில் பதிந்து பிறகு உண்மையாகிவிடும். இவ்வறிவை அறிதுயில் வல்லுனர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். புத்தகங்கள் மூலமாகவும் கற்றுக் கொள்ளலாம். குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களும் கற்றுக் கொள்வது இன்னும் நல்லது. அந்த அறிவு தங்கள் இல்லத்திலிருக்கும் மது அடிமைகளைத் திருத்தும். அவர்களின் முயற்சிகளுக்கு ஆக்கப்பூர்வமாக ஆதரவு தரும். மன உறுதியை அதிகரிக்கும். தன்னம்பிக்கையை வளர்க்கும். புதுமையான வழிகளைக் கடைப்பிடிக்க வழிகாட்டும். மது அடிமைகள் மதுவை விட்டுவிடத் தனக்குத்தானே கூற்று மொழிகளைத் “தன்னிலை அறிதுயில்” நிலைக்குச் சென்று சொல்லிக் கொள்வார் என்றால் அவரைத் திருத்துபவர்கள், அவரைத் திருத்தும் மன உறுதியைத் தரும் கூற்று மொழிகளைத் தங்களுக்குத் தாங்களே “தன்னிலை அறிதுயில்” நிலையில் கூறிக்கொள்வார்கள். இரு சாராருக்குமே பலன் கிடைக்கும்.
நுணுக்கம் 4 – தியானம் மற்றும் கூட்டுத் தியானம் (Meditation / Group Meditation)
தியானம் மனதை ஒருநிலைப்படுத்த உதவும். தியானம் செய்து அதன் மீது நாட்டம் ஏற்பட்டால், மது மீது உள்ள நாட்டம் தானாகவே குறைந்துவிடும். மனத்தூய்மைக்கு வழிவகுக்கும். உள்ளூரிலே தியானம் தெரிந்த ஆசிரியர்கள் உதவி பெறப்படும். ஒவ்வொரு குடியிருப்புப் பகுதிகளிலும் ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றாக இணைந்து குழுவாகக் கூட்டுத் தியானம் செய்வார்கள். மது அடிமையைத் திருத்த, மது அடிமையின் குடும்பத்தினருக்குத் தியானம் தேவையான மனப்பக்குவத்தைத் தரும். தியானம் தெரிந்தவர்கள் இப்பயிற்சியை இலவசமாக அளிக்க தாங்களாகவே முன்வர வேண்டும். புத்தகங்கள் மூலம் தியானம் செய்யக் கற்றுக் கொள்ளலாம். மன அமைதியைத் தரும் தியானம் செய்வதன் காரணமாக மனதை எரிமலையாக்கும் மதுவை, மது அடிமைகளின் மனது தானாகவே வெறுக்கும், ஒதுக்கும். “அக்னி ஸ்திரீ” பெண்கள் தன் உறுப்பினர்களிலே தியானம் தெரிந்தவர்களைக் கொண்டு “தியான எக்ஸ்னோரா”வை (Meditation ExNoRa) உருவாக்கிக் கொள்ளலாம்.
நுணுக்கம் 5 – யோகா ஆசிரியர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் சவாசனம்
ஒரு துணியை தரையில் விரித்து நல்ல ஓய்வு நிலையில் படுத்துக் கொள்ளுங்கள். மூன்று முறை ஆழ்ந்து மூச்சுவிட்டு கண்களை மூடிக் கொள்ளுங்கள். உடலின் ஒவ்வொரு பகுதியையும் நினைவுக்கூர்ந்து, உணர்ந்து அந்த உடல் பகுதி இளைப்பாறுகிறது, களைப்பாறுகிறது. அந்த உறுப்பின் செல்கள் ஓய்வு நிலையை அடைகின்றன என்று கூறிக் கொண்டே செல்லுங்கள். முதலாவது பாதம், பிறகு முழங்கால், தொடை, வயிறு, மார்பு, முதுகு, கழுத்து, முகம் என்று ஒவ்வொரு உறுப்பாக நினைவில் கொண்டு வந்து அந்த உறுப்பு ஓய்வு பெறுவதாக உங்களுக்குள்ளே கூறிக்கொள்ளுங்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரை கூறிக் கொள்வதற்குள் நீங்கள் ஆழ்ந்த தியான நிலையை அடைந்துவிடுவீர்கள். ஆல்பா நிலையை அடைந்துவிடுவீர்கள். அப்படி அந்த நிலை ஏற்பட்டவுடன் அதை உணர்ந்தவுடன் உங்களுக்கு நீங்களே உங்கள் வாழ்க்கையின் இலட்சியத்தை கூறிக்கொள்ளலாம். நான் ஒவ்வொரு நாளும் வாழ்வில் சிறப்படைகிறேன் என்று கூறிக் கொள்ளலாம். காலையில் உங்களுக்கு கிடைப்பது இயற்கை ஆல்பா.
இதோ நீங்களே உங்களுக்காக உருவாக்கிக் கொண்ட செயற்கை ஆல்பா. இதே நுணுக்கத்தை நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டு நேர்மாறாக அதாவது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்வரை ஒவ்வொரு உறுப்பும் இளைப்பாறுவதாக (RELAX) கூறிக்கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் ஆல்பா நிலையை அடையலாம். காலையில் வரும் இயற்கை ஆல்பா நிலையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதே போன்று மாலையில் நீங்களாகவே மேலே சொன்னது போல் ஆல்பா நிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
நல்விளைவுகள்
உயிரணுக்கள் புத்துணர்வு (Cell rejuvenation)
நீர் உங்களுடைய சகோதரன். உங்கள் உடலில் 71% தண்ணீர்தான்
நல்ல சிந்தனைகள் நன்மையைப் பயக்கும். கெட்ட சிந்தனைகள் கெட்டதை பயக்கும். இதோ இன்னொரு கோணத்தில். மனித உடலில் 71% தண்ணீர். மனிதனை தண்ணீரின் சகோதரன் என்றுக்கூட கூறலாம். மசாரோஎம்ஓடோ (MASARU EMOTO) என்னும் ஜப்பானிய விஞ்ஞானி தண்ணீரை வைத்து ஆராய்ச்சி செய்தார். தண்ணீரை பாராட்டி குளிர்சாதனப் பெட்டியில் ஊற்றினார். அது அழகான வடிவங்களாக (கிரிஸ்டல்ஸ்) மாறியது. அதே தண்ணீரைத் திட்டி ஊற்றினார். அது படிவங்களாக மாறவில்லை. அவர் கண்டுபிடித்தது என்னவென்றால் தண்ணீருக்கு உணர்வு இருக்கிறது என்பதே. ஆகவே, நம் உடம்பிலும் தண்ணீர் இருக்கிறது. அந்த தண்ணீருக்கும் உணர்வு இருக்கிறது. நாம் எதிர்மறையாக சிந்தித்தாலோ, கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தினாலோ, வஞ்சகம் நினைத்தாலோ அந்த உணர்வுகள் தண்ணீரை பாதிக்க வைக்கின்றன. அந்த தண்ணீர் நம் உடல் இரசாயணத்தை மாற்றி உடலுக்கு உபாதைகளையும், பொல்லாத நோய்களையும் தருகின்றன. இதைப் படிக்கும் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியது, நாம் நல்லதையே நினைக்க வேண்டும். நாம் நல்லதையே சொல்ல வேண்டும், நாம் நல்லதையே செய்ய வேண்டும். (காண்க படங்கள்)
மறைந்த ஜப்பானிய ஆராய்ச்சியாளர்
மஸாரு எமோட்டாவின் (MASARU EMOTO) கண்டுபிடிப்பு
மனித உடலில் 71% தண்ணீர் உள்ளது.
உடலில் இருக்கும் தண்ணீர் நம் சிந்தனைக்கேற்ப பாதிப்புக்குள்ளாகிறது.
நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது அந்த 71% தண்ணீர் நல்ல பாதிப்புக்கு உள்ளாகிறது.
நாம் சோகமாக இருந்தால் 71% தண்ணீர் கெட்ட பாதிப்புக்கு உள்ளாகிறது.
நாம் ஒருவரை வெறுத்தாலோ, சபித்தாலோ 71% தண்ணீர் மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகிறது.
அந்த 71% தண்ணீர் நல்ல பாதிப்புக்கு உள்ளானால், நம் உடல் நலமும், மனநலமும் சிறப்பாக இருக்கும்.
அந்த 71% தண்ணீர் கெட்ட பாதிப்புக்கு உள்ளானால், நம் உடல் நலமும், மனநலமும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகும்.
இதுதான் மஸாரு எமோட்டாவின் கண்டுபிடிப்பு.
இந்த கண்டுபிடிப்புக்கு இலட்சக்கணக்கான ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். நூற்றுக்கு நூறு பின்பற்றுபவர்கள் உலகம் எங்கும் இருக்கிறார்கள். அதே போல் “இது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒன்று. இதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று இந்த கண்டுபிடிப்பை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். மருத்துவ உலகம் இதை இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை.
7-ம் அறிவு வித்தகரின் கருத்து
“இது சரியா, தவறா என்பதைப் பற்றி நாம் இப்போது மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டாம்.
மஸாரு எமோட்டாவின் கண்டுபிடிப்பைப் பின்பற்றினால் அது நமக்கு நன்மையைப் பயக்குமா? அல்லது தீமையைப் பயக்குமா? என்பதே நம் கேள்வியாக இருக்க வேண்டும்.
அவர் கூறும் அறிவுரை என்ன? நல்லதையே நினையுங்கள் என்பதுதானே. அது நல்ல அறிவுரைதானே?
அவர் தினமும் மது அருந்துங்கள் என்று சொல்லவில்லையே. அவர் அறிவுரை நமக்கு நன்மை பயக்கும் ஒன்றுதானே.
நாம் இதை உண்மை என்றே கருதி அவர் ஆலோசனையைக் கடைப்பிடிப்போம்.
அதனால் நாமும் மற்றவர்களும் நல்லவர்களாக இருப்போம். நம் உலகம் சிறப்படையும்.