“அக்னி ஸ்திரீ” அமைப்பின் பெயர் விளக்கம்
“அக்னி ஸ்திரீ” என்பதுதான் இந்த எழுச்சி இயக்கத்தின் பெயர். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை இதுதான் இந்த புரட்சி அமைப்பின் பெயர். “அக்னி ஸ்திரீ” என்ற சொற்கள் சமஸ்கிருத வார்த்தைகள். இந்தியா முழுவதற்கும் பொதுவானவை. “அக்னி” என்றால் “நெருப்பு”. “ஸ்திரீ” என்றால் “பெண்”. ஆனால் தமிழ்மொழி மற்றும் மலையாளம் மொழி பேசும் பெண்களைப் பொறுத்தவரை இந்த அமைப்பு “தீ” என்ற ஒரு எழுத்துப் பெயராலேயே செல்லமாக அழைக்கப்படும்.
இப்பூவுலகின் கண்களே!
புயல் ஓய்ந்து பெண்கள் வாழ்வில் வசந்தம் வீசிட இந்நூலைப் படித்து நூலில் தரப்பட்டிருக்கும் ஆலோசனைகளைப் பின்பற்றிப் புதிய பாதையில் செல்லுங்கள்.
இந்நூல் பெண்கள் தங்களைப்
- பாதுகாத்துக் கொள்ள
- முன்னேற்றிக் கொள்ள
- வேலை வாய்ப்புப் பெற
- சுய வேலை வாய்ப்பு மேற்கொள்ள
- அமைப்பு முறையில் செயல்பட
உதவும். அவர்களை உயர்த்திப் புகழ் பெறும் நிலைக்கு எடுத்துச் செல்லும். படித்துப் பயன்பெறுங்கள். முக்கியமாக “தீ”யில் இணைந்து இவ்வமைப்பை உருவாக்கி, புதியதோர் உலகைப் படையுங்கள்.
Dr. Exn. M B .நிர்மல்
ஆசிரியர்
“அக்னி ஸ்திரீ” (“தீ”)
“பெண்கள் பாதுகாப்புக் கேடயம்”
பெண்களுக்காகப் பெண்களே நடத்தும் பெண்கள் இயக்கம்
பி.கு. எழுதப் படிக்கத் தெரிந்த பெண்கள், எழுதப் படிக்கத் தெரியாத பெண்களுக்கு இந்நூலினைப் படித்துக் காட்டுமாறு வேண்டுகிறோம். படிக்காதோர் இதனால் பயன் பெறுவார்கள். அதைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சியுறுவீர்கள். |
“அக்னி ஸ்திரீ” (“தீ”) அமைப்பில் உறுப்பினர்களாக, தலைவர்களாக படித்தப் பெண்களும், வசதியான பெண்களும் சேர முன்வரலாம். இவ்வமைப்பிற்கு முக்கிய வழிக்காட்டியாக பெண்களுக்கான “சக்தி எக்ஸ்னோரா” அமைப்பு திகழும். ஒவ்வொரு ஊரில் இருக்கும் “சக்தி எக்ஸ்னோரா” (Sakthie ExNoRa) “அக்னி ஸ்திரீ” (“தீ”) அமைப்பினை உருவாக்கி ஏழைப் பெண்களுக்கும், படிக்காத பெண்களுக்கும் மற்றும் “அக்னி ஸ்திரீ” (“தீ”) உறுப்பினர்களுக்கும் வழிகாட்டும்.
இனி பெற வேண்டியது பெண்கள் சுதந்திரம் மட்டுமே.
இதோ தொடங்கிவிட்டது பெண்கள் சுதந்திரப் போராட்டம்.
சுனிதாகிருஷ்ணனின் பாலியல் வன்முறைக்கு எதி்ரான வீடியோ பதிவைப் பாருங்கள், சுனிதா கிருஷ்ணனின் உரையைக் கேளுங்கள்…….
பாலியல் தாக்குதல்களும், பருத்தி வீரன்களும் (Sunitha Krishnan’s fight against sex slavery)
ஒரே வருடத்தில் பல்லாயிரம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பல லட்சம் கொடுமைகளின் ஒரு ‘சாம்பிள்’ பட்டியல் இப்பகுதியில் தரப்பட்டுள்ளது. இந்தச் செய்தித்தலைப்புகள் யாவும், தினத்தந்தி, தினமணி, தினமலர், தினகரன், மாலை முரசு, மாலை மலர், மக்கள் குரல், மாலைச் சுடர், தமிழ்முரசு ஆகிய பத்திரிகைகளில் இருந்து எடுக்கப்பட்டவை. 100 கொடுமைகள் இழைக்கப்பட்டால் அவற்றில் 10 மட்டுமே கொடுமை இழைக்கப்பட்ட பெண்களால் வெளி உலகிற்கு கூறப்படுகின்றன. அந்த 10-ல் ஒன்றுதான் செய்தித்தாளில் வெளியாகிறது. வெளிவராத செய்திகள் இன்னும் கொடுமையானவை.
இப்பகுதியின் கடைசிப் பக்கத்தில் ஒரு பக்கம் வெற்றிடமாக விடப்பட்டுள்ளது. இந்தச் செய்திகளைப் படித்து முடிந்தவுடன் இவற்றைப் படிக்கும் நீங்கள் இந்தச் செய்தித்தாள்களின் தலைப்புகளை வைத்து எத்தனை விதமான கொடுமைகள் பெண்களுக்கு இழைக்கப்பட்டுள்ளன என்பதைத் தயவு செய்து பட்டியலிடவும்.
இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் உயிரோடு இருக்கும் பெண்களில் பலர் நாளை இதே நேரத்தில் உயிரோடு இருக்கமாட்டார்கள். கொலை செய்யப்பட்டிருப்பார்கள். அப்படி உயிரோடு இருந்தாலும் உருக்குலைக்கப்பட்டிருப்பார்கள். கற்பை இழந்திருப்பார்கள். பெண்களுக்கு ஓர் அற்புத ஆயுதம் நாங்கள் தருகிறோம். அந்த ஆயுதந்தான் இந்த நூல். எங்குச் சென்றாலும் இந்தச் சிவப்பு நிற நூலைக் (Red Book) கையில் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.
ஏன் சிவப்பு………….?
சிவப்பு நிறம் அபாயத்தின் அடையாளம். வாகன சிக்னலில் சிவப்பு என்றால் நின்றுவிட வேண்டும். சிவப்பு சிக்னலை பொருட்படுத்தாமல் போகிறவர்கள் ஆபத்திற்குள்ளாவார்கள். பெண்களுக்குத் தொல்லைத் தர நினைக்கும் கயவர்களுக்கு சிவப்பு நிறம் ஒரு அபாய அறிவிப்பு. பெண்களுக்கு இன்னல் ஏற்படும் போது, அவற்றிலிருந்து விடுபட்டு நல்வழி காட்டிட இந்நூல் ஒரு மிகச்சிறந்த கையேடாக விளங்கும்.
அதுமட்டுமல்ல. “தீ”யின் நிறமும் சிவப்பு. குங்குமத்தின் நிறமும் சிவப்பு. நம்மை உயிர் வாழ வைத்துக் கொண்டிருக்கும் இரத்தத்தின் நிறமும் சிவப்பு. ஆக, சிவப்பின் மகிமை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த சிவப்புதான் “தீ” இயக்கத்தின் அடையாளம்.
அப்படி என்ன இந்த நூலின் சிறப்பு?
- இந்நூல் பெண்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வை உண்டாக்கும்.
- அவர்களை ஒன்று சேர்க்கும்.
- தன்னம்பிக்கை ஊட்டும்.
- பிரச்சினைகள் வரும் போது, சந்திக்கின்ற வழிமுறைகளை அடையாளம் காட்டும்.
- மது அடிமைகளைத் திருத்த வழிக்காட்டும். மது அடிமைகள் மனம் மாற்றம் பெற்று புதிய வாழ்க்கையை தொடங்க வைக்கும்.
- எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பெண்ணுக்குக் கொடுமை நிகழும் போது உடனடியாகத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அந்தப் பெண் எவரையெல்லாம் அணுகலாம், தொலைபேசியில் தொடர்புக் கொள்ளலாம் என்ற பட்டியலே இந்நூலில் தரப்பட்டிருக்கிறது.
- யாராவது எப்போதாவது பெண்களுக்குத் தொல்லைத் தர முயன்றால், அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்நூலில் 15-வது அத்தியாத்தில் பட்டியலிட்டுத் தரப்பட்டுள்ள முக்கிய முகவரிகள் தலைப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் உடனே தொலைபேசி மூலம் தொடர்புக் கொள்ள வேண்டும். அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அதேப் பகுதியில் தரப்பட்டிருக்கும் பத்திரிக்கைகளைத் தொடர்புக் கொண்டு அவர்கள் உதவியை நாடலாம்.
தொலைபேசியிலேயே தொடர்புக் கொள்ளலாம்.
முக்கியமாகப் பெண்கள் ஒன்றுசேர்ந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் வழிகாட்டுகிறது. இவ்வைமைப்பைத் தொடங்க “அக்னி ஸ்திரீ” (“தீ”), #40, ராம்ஸ் அபார்ட்மெண்ட்,
விஜயராகவா சாலை, தி.நகர், சென்னை 600 017,
தொலைபேசி எண் 4219 35 96,
செல் 98400 34900,
Email ID: mbnirmal@gmail.com மூலம் தொடர்புக் கொண்டு அனுமதி பெற்றுக் கொள்ளவும்.
“தீ” என்று அழைக்கப்படும் “அக்னி ஸ்திரீ” – Dr. Exn. M B.நிர்மல் (நூலாசிரியர்)
காணிக்கை
நாள்தோறும், நிமிடந்தோறும், நொடிதோறும் கயவர்களின் கபடச் செயல்களால்,
- கொடுமைக்குள்ளாகி
- தாங்க முடியாத வேதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு
- பிரச்சினைகள் என்ற படுகுழியில் தள்ளப்பட்டு
- சுனாமியை ஒத்த நிஜ வாழ்க்கை சோதனைகளால் உருக்குலைக்கப்பட்டு
- அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டு
வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையிலும்,
- பிரளயமே வந்தாலும் பின் வாங்கமாட்டேன்
- தடைக்கற்களைப் படிக்கற்களாக்குவேன்
- பிரச்சினைகளைப் பரிசுகளாக்குவேன்
- எனக்கு வரும் சோதனைகளை வாழ்க்கையின் சாதனைகளாக மாற்றுவேன்
- தோல்விகளை வெற்றிகளாக்குவேன்
- சோகத்தை மகிழ்ச்சியாக்குவேன்
என்று சூளுரைத்து, தொய்வடையாத தன்னம்பிக்கையோடும், தளராத மனதோடும், இடைவிடாது முயற்சிகளை மேற்கொண்டு, அயராது உழைக்கும் வீரப் பெண்களுக்கு இந்நூலைக் காணிக்கையாக்குகிறேன்.
“தீ” என்று அழைக்கப்படும் “அக்னி ஸ்திரீ”
நன்றி! நன்றி!! நன்றி!!!
பெண்கள் பாதுகாப்புக் கேடயமான “தீ” என்ற “அக்னி ஸ்திரீ” சிவப்புப் புத்தகத்தைக் கணினியில் அச்சுக்கோர்த்து அளித்த திருமதி. லாவண்யா செந்தில்குமார் அவர்களுக்கு என் அன்பு கலந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
பல காரணங்களால் வராமல் தடைப்பட்டுக் கொண்டிருந்த இந்நூலை வெளியிடவும், இந்த இயக்கதைத் தொடங்குவதற்கு உந்துதலாக இருந்த சர்வதேச இளைஞர் எக்ஸ்னோராவின் பொது செயலாளர், இலண்டன் நகரில் இயன்முறை மருத்துவத்துறையில் (Physiotherapy) கொடிகட்டிப் பறக்கும் தமிழ் இளம் பெண் திருமதி நிஷா தோட்டாவிற்கும் காணிக்கையாக்குகிறேன்.
இதை புத்தகமாக உங்கள் கரங்களில் தவழ அச்சடித்துக் கொடுத்த என்னுடைய நெருங்கிய நண்பர், தமிழறிஞர், உண்மை, உழைப்பால் உயர முடியும் என்று உலகிற்கு உணர்த்திய உத்தமர், தமிழக அரசியல் பத்திரிக்கையின் ஆசிரியர் திரு.சுந்தர்ராமன் அவர்கள்.
இந்த இயக்கத்தை முதன்முதலாக கடலூரில் அரங்கேற்றம் செய்ய, கடல் போன்று பெண்களை ஒன்றுதிரட்டி, பிரம்மாண்ட கூட்டத்தை ஏற்பாடு செய்து அருட்தந்தை அருள்புஷ்பம் மற்றும் அவருடைய அன்பு சகோதரர்கள்.