வாலிபன்
vaaliban will be GPian will be the name in all languages
ஏன். வாலிபன்?
வாலிபர்களைப் பற்றி பாரத ரத்னா அப்துல்கலாம் பொன்மொழிகள்.
“நீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்”.
உங்களுக்கு சிறகுகள் உள்ளன. தவழ்ந்து செல்லாதீர்கள். அதைக் கொண்டு மேலே பறந்து செல்லுங்கள்”.
“உங்களிடம் கேளுங்கள். நீங்கள் எதற்காக நினைவு கூறப்பட விரும்புகிறீர்கள்?”
“நீங்கள் உறங்கும் போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு”
“முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களே அவற்றை வெற்றிக் கொள்ள முடியும்”.
இன்றைய வாலிபர்கள் நாளையத் தலைவர்கள்.
நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் வாலிபர்களுக்குப் பெரும் பங்கு உள்ளது. இந்தியத் திருநாட்டில் தமிழ்நாடு பல வகைகளில் முன்னனிலையில் இருந்தது.
முக்கியமாக தமிழர்கள் கடும் உழைப்பாளர்களாக கருதப்பட்டார்கள். நம்மை ஆண்ட அன்னியர்களும் தமிழர்கள் உழைப்பைக் கண்டு வியந்தார்கள். பல நாடுகளுக்கும் உழைக்க தமிழர்களை அழைத்து சென்றார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் இலங்கை தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய சென்றார்கள்.
மலேயா மற்றும் பர்மா ரப்பர் தோட்டத்தில் வேலை செய்ய எண்ணற்றோர் சென்றனர். பிஜி தீவில் கரும்பு தோட்டத்தில் வேலை செய்தார்கள். மொரிஷியஸ் கடுமையாக உழைத்தார்கள். தென் ஆப்பிரிக்காவில் வைரத்தை வெட்டி எடுத்தார்கள்.
கர்நாடகாவில் கோலார் தங்க சுரங்கத்தில் 10000 அடி ஆழத்தில் உயிரை பணையம் வைத்து தங்கத்தைச் சுரண்டி எடுத்தார்கள்.
ஆனால் தமிழ் உழைப்பாளர்கள் ஏராளமானோர் காணாமல் போய்விட்டார்கள். ரோட்டில் சுருண்டு கிடக்கிறார்கள். அவர்கள் பார்த்த வேலையை பீகார், ஒரிஸா இளையோர் எடுத்துக் கொண்டுவிட்டார்கள். பெரிய கொடுமை என்னவென்றால் இன்று 15 வயது சிறுவர்களும் மது அருந்துகிறார்கள். சென்னைக்கு அருகே ஒரு கிராமத்தில் ஆண்கள் சராசரி வயது 18. குடித்து குடித்து இளம் வயதிலே இறந்துவிடுகிறார்கள்.
கரை தெரியாத கண்ணீர்ப் பயணம்
பிறந்து அறிவு தெரிந்தவுடன்,
தெரிந்தது தந்தை ஒரு குடிகாரர் என்று
தாய்க்குக் கிடைத்த அடி உதையில்
எனக்கும் பங்கு கிடைக்க ஆரம்பித்தது.
அடி வாங்கி அடி வாங்கி
இருபதாம் வயதில்
அடியெடுத்து வைத்தவளுக்கு
இனிய செய்தி:
திருமணமாம் எனக்கு
மூன்று முடிச்சு விழுந்தது.
குடிகாரத் தந்தையிடமிருந்து
விடுதலை கிடைத்தது
கரம் பிடித்தவனின்
அரவணைப்புக் கிடைத்தது.
முதல் இரவு முடிவில்லா இரவு
இரண்டாம் இரவு இனிய இரவு
மூன்றாம் இரவு முத்தான இரவு
நான்காம் இரவு நல்ல இரவு
ஐந்தாம் இரவு……………..
“அய்யோ”…………..”அம்மா”………………
அடி உதை இரவு.
மல்லிகைப் பூ வாங்கி வரும்
கணவன் கையில்
மது பாட்டில்.
அன்று ஆரம்பித்த
அடி உதை
தொய்வில்லாமல் தொடர்ந்தது.
வருடம் ஒன்றானவுடன்
அடி உதை எனக்கு
வலியை உண்டாக்கவில்லை
மரத்துப் போய்விட்டேனா?
அல்ல!
துளிர்விட்டேன்!
மனம் மகிழ்ச்சியில்
நிரம்பியது……………….
நிரம்பிய வயிறே காரணம்.
உடல் வாங்கிய
உதைகளுக்கு ஒத்தடம் கொடுத்தது.
என் வயிற்றுக்குள்ளே
நான் வாங்கிய உதைகள்.
பத்தாவது மாதத்தில்
தப்பாமல் பிறந்தான்
பொன்னான புதல்வன்.
கணவன் கை வரிசை
தொடர்ந்தாலும்
வளரும் மகனின்
பல் வரிசை
அருமருந்தாக இருந்தது.
காலச் சக்கரம் சுழன்றது
நாற்பது வயது தாய் நான்
இருபது வயது இளைஞன்
என் மகன், இனிய மகன்
பார்க்கும் போதெல்லாம்
வேதனையை மறந்தேன்.
“அம்மா என் தகுதிக்கேற்ற
வேலை கிடைத்துவிட்டது”
என்று அவன் மகிழ்ச்சியுடன்
வந்து கூறிய போது
என் நெஞ்சம் நெகிழ்ச்சியில் மூழ்கியது.
முதல் மாதச் சம்பளத்துடன்
ஓடி வந்தான்
முதல் மரியாதை எனக்குத்தான்.
காலில் விழுந்தவனைக்
கைப் பிடித்துத் தூக்கிய போது
பெற்ற வயிறு பெருமிதம் அடைந்தது
புதிய பிறவி எடுத்தவளாகப் பூரித்தேன்.
மூன்று மாதங்கள்
மூன்று நிமிடங்களாக ஓடின.
அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த
என்னை யாரோ
எட்டி உதைக்கிறார்கள்.
விழித்தெழுந்து கொள்வதற்குள்
என்னை மிதிக்கிறார்கள்.
யார் அது, உடல் வலியுடன்
கண் திறந்து பார்க்கிறேன்.
“மீன் குழம்பில் மீன் எங்கே?”
குரல் அல்ல கர்ஜனை கேட்கிறது
குரலுக்குரியவன்
பத்து மாதம் நான் சுமந்து பெற்றெடுத்த
“குடி” மகனாகப் புதிய உருவெடுத்திருந்த
என் அன்பு மகன்
என் கண்ணீர்ப் பயணம் தொடர்கிறது.
- உண்மை நிகழ்ச்சி எழுத்தில் வடிக்கப்பட்டுள்ளது.
- அச்சடித்து விநியோகிக்கவும், கூட்டங்களில் இந்நூலைப் படிக்கவும்
- வாலிபன் அமைப்பை உங்கள் பகுதியில் இன்றே தொடங்கவும்.
இளைஞர்களுக்கு இன்று தேவை
தளராத மனம்
வற்றாத சிந்தனை
தணியாத ஆர்வம்
அயராத உழைப்பு
இதுவே வாலிபன் அமைப்பின் தாரக மந்திரம். வாலிபன் ஏழாம் அறிவு பெற்று வாழ்க்கையில் ஏற்றம் பெறுவார்கள்.
அவர்கள் பெயர்களுக்கு பின்னால் GPian என்று போட்டுக் கொள்வார்கள். அதன் பொருள் என்ன?
ஓ இளைஞனே!
ஒ இளைஞர்களே!!
ஓ இளைஞனே!
ஒரு கல் தடுக்கி நீ விழுந்துவிடலாம்.
ஒ இளைஞர்களே!!
உங்களால் ஒரு மலையையே தகர்க்க முடியும்.
ஓ இளைஞனே!
ஆற்று வெள்ளம் உன்னை அடித்துச் செல்லலாம்.
ஒ இளைஞர்களே!!
உங்களால் ஒரு ஆற்றின் திசையையே திருப்ப முடியும்.
ஓ இளைஞனே!
ஒரு கொடியவனால் உனக்கு இன்னல் வரலாம்.
ஒ இளைஞர்களே!!
உங்களால் தகுந்த தண்டனை வாங்கித் தர முடியும்.
ஓ இளைஞனே!
ஒரு கொடியவனால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
ஒ இளைஞர்களே!!
உங்களால் அனைத்து கொடியவர்களிடம் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
ஓ இளைஞனே!
நீ தனியாக பாடினால் மற்றவர்கள் அதை ரசிக்காமல் போலாம்.
ஒ இளைஞர்களே!!
நீங்கள் சேர்ந்து இசைத்தால் அனைவரும் கரவொலி எழுப்புவார்கள்.
மற்றவர்கள் வெற்றிக்குத் தோரணம் கட்டுவதை விடு. உன் வெற்றிக்குக் காரணம் தேடு.