டிசம்பர் 16:
டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்த 23 வயது மருத்துவ மாணவி தன் நண்பரான சாப்ட்வேர் என்ஜினீயருடன் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு தியேட்டருக்கு சினிமா பார்க்கச் சென்றார். இரவு 9.30 மணிக்கு வெளியில் வந்த அவர்களுக்கு வீடு திரும்ப ஆட்டோ கிடைக்கவில்லை. அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ்சில் அவர்கள் ஏறினார்கள்.
இரவு 10 மணி:- பஸ்சில் டிரைவர் ராம்சிங்கும் அவனது கூட்டாளிகள் 5 பேரும் இருந்தனர். அவர்கள் மாணவியைக் கிண்டல் செய்தனர். அதை மாணவியின் நண்பர் தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்குள் கை- கலப்பு, மோதல் ஏற்பட்டது. பஸ்சில் இருந்த பழைய இரும்புக் கம்பிகளை எடுத்து சாப்ட்வேர் என்ஜினீயரைச் சரமாரியாகத் தாக்கினார்கள். இதை மாணவி தடுத்தார்.
மது போதையில் இருந்த அந்த வாலிபர்கள் கண் மூடித்தனமாக இருவரையும் தாக்கினார்கள். தலையில் அடிபட்ட சாப்ட்வேர் என்ஜினீயர் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து மாணவி அவர்களைக் கடுமையாகத் திட்டினார். பஸ்சை நிறுத்தும்படிக் கூச்சலிட்டார். இதனால் கோபம் அடைந்த வாலிபர்கள், மாணவியை மீண்டும் இரும்பு கம்பியால் தாக்கினார்கள். ஒருவன் மாணவி வயிற்றில் கம்பியால் குத்தினான். இதில் மாணவி சுருண்டு விழுந்தார். போதையில் இருந்த வாலிபர்கள் ஈவு இரக்கமின்றி மாணவியைக் கற்பழித்தனர்.
சுமார் 30 நிமிடம் அந்த பஸ் டெல்லி சாலையில் ஓடிய நிலையில், மாணவி சின்னா பின்னமாக்கப்பட்டார். காம இச்சையைத் தீர்த்துக் கொண்ட 6 பேரும் 10.35 மணியளவில் ஓடும் பஸ்சில் இருந்து மாணவியையும், அவரது நண்பரையும் சாலையோரத்தில் தள்ளிவிட்டுச் சென்றனர்.
சாலையோரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை, அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மாணவியையும், அவரது நண்பரையும் மீட்டு டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
டிசம்பர் 17:
டெல்லி மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அன்று காலை பரபரப்புடன் இணையத்தளங்களில் வெளியானது. மாணவிக்கு மயக்க நிலையில் செயற்கை சுவாசத்துடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவியின் நண்பர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதன் மூலம் குற்றவாளிகள் பற்றிய விவரம் தெரிய வந்தது. டெல்லி போலீசார் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடினார்கள்.
டிசம்பர் 18:
மாணவி கற்பழிப்பு குற்றவாளிகளில் முக்கியமானவரான ராம்சிங்கை போலீசார் கைது செய்தனர். அவன் ஓட்டி வந்த பஸ் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய உரிமம் இல்லாமல் அந்த பஸ் இயக்கப்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ராம்சிங் கொடுத்த தகவலின் பேரில் அவனது சகோதரன் முகேஷ் சிங் மற்றும் பவன், வினய் ஆகிய 3 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர். மற்ற 2 குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் பீகார், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு விரைந்தனர்.
டிசம்பர் 19:
சப்தர்ஜங் மருத்துவமனையில் மாணவி உடல்நிலை மிக, மிகக் கவலைக்கிடமாக மாறியது. துருப்பிடித்த இரும்புக் கம்பியால் தாக்கியதில் மாணவி குடல் கிழிந்து அழுகி விட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் டாக்டர்கள் மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்து மாணவியின் சிறுகுடலை அகற்றினார்கள். அன்றே அடுத்தடுத்து மேலும் 2 ஆபரேஷன்கள் செய்யப்பட்டன.