Select Page

அழிவின் விளிம்பில் பொம்மலாட்டம்

அழிவின் விளிம்பில் பொம்மலாட்டம்

அழிவின் விளிம்பில் பொம்மலாட்டம்

இன்றைய குழந்தைகளுக்கு பொம்மலாட்டம் கலையை பற்றி அதிகமாக தெரியாது. பெரும்பாலனவர்களுக்கு தெரிந்த கலை சினிமா. ஆனால் இந்த சினிமாக்களுக்கும் அதில் நீங்கள் காணும் அனிமேஷன்களுக்கும் முன்னோடிகளாக விளங்குவது பொம்மலாட்டம்.

கல்யாண முருங்கை அல்லது முள் முருங்கை என்று அழைக்கபடும் மரத்தின் கட்டைகளை நீரில் ஊற வைத்து பிறகு உலர வைப்பர். நன்கு உலர்ந்த பிறகு பொம்மைகளின் உருவங்களை தனித்தனியாக வெட்டி எடுத்து செதுக்குவர். உறுப்புகளை கயிறுகளால் இணைப்பர். இந்த பொம்மைகள் 45 முதல் 90 செண்டி மீட்டர் வரை இருக்கும். பழங்காலங்களில் மஞ்சள் நிற வர்ணம் மட்டுமே தீட்டுவர். பிறகு கதாபாத்திரங்களுக்கு தகுந்தாற் போல் வர்ணங்கள் தீட்டுகின்றனர். பொம்மலாட்டத்தில் மொத்தம் 9 கலைஞர்கள் பங்கேற்பர். இவர்களில் நால்வர் பொம்மைகளை இயக்குவர் மற்ற நால்வர் இசையமைப்பர். ஒருவர் உதவியாளராக இருப்பார்.

தமிழர்களின் மிகப் பழமையான மரபு வழி கலைகளில் பொம்மலாட்டமும் ஒன்று. மரப்பாவை கூத்து, பாவைக் கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் இதிகாசம், புராணங்கள், சீதா கல்யாணம், அரிசந்திர கதை என பல கதைகளை சுவாரஸ்யம் குன்றாமல் நாடக வடிவில் இசையோடு பார்வையாளர்களை மகிழ்விப்பர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்ட பல வழிகள் இருந்தது ஆனால் அவற்றை எல்லாம் ஆங்கிலேய அரசின் கிடுக்குபிடியினால் பின்பற்ற இயலவில்லை. அப்போது பொம்மலாட்டம் போன்ற மரபு வழி கலைகள், கவிதைகள், பாடல்கள் என பல வடிவங்களில் மக்களுக்கு விடுதலையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.

கலைகளின் பெட்டகமான தமிழகத்தில் பொம்மலாட்ட கலை அழிவின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வெகு சில குடும்பங்கள் தான் தற்போது தமிழகத்தில் பொம்மலாட்ட கலையை பின்பற்றுகின்றனர். தமிழக அரசு பொம்மலாட்ட கலையை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் பாரம்பரியமான பொம்மலாட்ட கலையை பாதுகாக்க கலைஞர்கள் வேண்டுகோள்


திரைப்படத் துறையின் அதீத வளர்ச்சியால், தமிழகத்தில் தொன்மையான பாரம்பரியக் கலை பொம்மலாட்டம் படிப்படியாக அழிந்து வருகிறது.  

தமிழகத்தின் அடையாளமே கலைகள் தான். அதிலும், பாரம்பரிய கலையான பொம்மலாட்டம் வரலாறு நீண்டநெடியது. கல்யாண முருங்கை மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை, நூலை கட்டி திரைக்கு பின்னால் இயக்கியபடி, இதிகாசமுத்தையும்  புராணக் கதைகளையும் அரங்கேற்றும் பொம்மலாட்டம் பல நூற்றாண்டு பெருமை கொண்டது. நாகரிகத்தின் வளர்ச்சியால் நலிந்து வரும் இந்த கலைக்கு உயிர் கொடுக்கும் வகையில், தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை சார்பில், பொம்மலாட்டம் மூலம்  ராமாயண நாடகம் அரங்கேற்றப்பட்டது. இது குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இன்றைய திரைப்படங்களில் கிராபிக்ஸ், அனிமேஷன் போன்றவை எப்படி முக்கிய பங்கு வகிக்கிறதோ, அதை போல தான் பொம்மலாட்டங்களில் கதாபாத்திரங்கள் பேசுவதும்,சண்டை இடுவதும், காதலிப்பதும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இடம் பெற்றிருந்தன. விரல் நுனியில் காட்சிகளை மாற்றி கண்முன்னே நிறுத்துவது வியப்பை தருவதாக கூறுகின்றனர் ரசிகர்கள்.

தலை, கைகளில் கயிறுகட்டி கால்கள் இல்லாமல் துணிகளால் நீளமாக உடை கொடுத்து, இந்த பொம்மைகளை திரைக்கு பின் இருந்து ஆட்டி வைப்பர். கயிற்றை லாவகமாக ஆட்டி, அதன் அசைவுக்கு தக்கவாறு பாடியும் நடிப்பர். திரைக்கு பின்னால் ஆர்மோனியம், டோலக், ஜால்ரா, சிப்ளாகட்டை, தாளம் வாசித்து, இசைக் குழுவினர் இசை கொடுக்க, பொம்மைகளை அதற்கேற்ப ஆட்டுவிக்கும் போது, பின்பாட்டும் சேர, ஏதோ பொம்மைகள் பாடுவது போல ஒரு பிரமிப்பான உணர்வை காண்போரை ஏற்படுத்தும். இத்தகு பாரம்பரிய பெருமைக்கு அடையாளமாக திகழ்ந்த பொம்பலாட்ட கலை, தற்போது நலிவடைந்து வருவதாக வேதனையுடன் கூறுகின்றனர் கலைஞர்கள். 

சில ஆண்டுகளுக்கு முன் பிரபலமாக இருந்த இந்த கலை தற்போது மெல்ல…மெல்ல… அழிந்து வருகிறது.  ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்ட தொழிலில் தற்போது விரல் விட்டும் எண்ணும் அளவிற்கே கலைஞர்கள் இருப்பது  வருத்தம் அளிப்பதாக கூறுகிறார் கலை பண்பாடு துறை மண்டல இயக்குனர் ஹமநாதன் 

பழங்கால திருவிழாக்கள், கோவில் பண்டிகைகள் என எந்த விழா எடுத்தாலும், அதில் பொம்மலாட்டம் முக்கிய இடம் பிடித்தது என்றால் அது மிகையல்ல. அத்தகைய பாரம்பரிய கலை, தற்போது சி அத்தி பூத்தாற் போன்று ஒரு சில இடங்களில் மட்டுமே நடத்தப்படுவது பொம்மலாட்ட கலைஞர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது என்பதே நிஜம்.