7. அரவணைக்கும் அன்பு சகோதரிகள் Embracing Sisters
துரிதமாக துயர் துடைக்கும்
அக்னி ஸ்திரீயின் “அரவணைக்கும் அன்பு சகோதரிகள்”
“ஒவ்வொருவரும் அனைவருக்காக,
அனைவரும் ஒருவருக்காக”
“One for all and all for one”
இன்று ஒரு பெரிய கேள்வி குறி பெண்கள் பாதுகாப்பு. நாள்தோறும் செய்தித்தாள்களைப் புரட்டினால் பக்கத்திற்குப் பக்கம் நாம் பார்ப்பது பாவையர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள். தொலைக்காட்சி செய்திகள் கல் நெஞ்சுகளையும் உருக்கிவிடும். இதற்குக் காரணங்கள் பல.
- பெண்கள் தங்களை ஒன்று சேர்த்து ஒரு அமைப்பாக இயங்கவில்லை.
- தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது இவர்களுக்கு தெரியாது.
- விழிப்புணர்வு துளியும் கிடையாது. அறியாமை என்ற நோயால் இவர்களில் பெரும்பாலோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
- இவர்களைத் தட்டிக் கொடுக்க யாரும் இல்லை. தட்டிவிடத்தான் ஏராளமானவர்கள் உள்ளார்கள்.
- பெண்களிடையே ஒற்றுமை உண்டாக்கப்படவில்லை. பிரிந்து உள்ளார்கள். ஜாதி, மத, மொழி பேதங்களால் பிளவுபட்டுள்ளார்கள். இந்தப் பிளவுகளால் பெண்களும் அவர்களின் குழந்தைகளும்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு வழிக்காட்டுதல் போதுமானதாக இல்லை. இன்றைய சூழ்நிலையில் பெண்களுக்கு வீட்டிலேயே பாதுகாப்பு அதிகமாக தேவைப்படுகிறது.
அரசும், காவல்துறையும் பாதுகாப்பு தருகிறார்கள். கவலை இல்லை. ஆனால் துயரங்கள், பின் துயரங்கள் பெண்களைத் துரத்துகின்றன. அந்த கணங்களில் தேவை அரவணைப்பு. சரியான தாயுள்ளத்துடன் பரிவுக்காட்ட சகோதரிகள் தேவை. கவலை வேண்டாம், பெண்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு அரவணைப்பு அமைப்பை உருவாக்கிக் கொள்வதே. 20 பேருடன் ஆரம்பியுங்கள். ஒரே மாதத்தில் அது 500 ஆகிவிடும். அந்த அமைப்பின் பெயர் “அக்னி ஸ்திரீ அரவணைக்கும் அன்பு சகோதரிகள்”.
எந்தப் பெண்ணுக்குத் துன்பம் நேர்ந்தாலும், இவர்கள் தீ அணைக்கும் துறை போன்று விரைந்து செல்வார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அனைத்து உதவிகளும் பரிவுடன் செய்வார்கள். இதற்கு ஒரு படி மேலாக யாருக்கும் துன்பம் நிகழாதவாறு பாதுகாப்பு அரணாக இருந்து பார்த்துக் கொள்வார்கள். இவர்கள் தங்கள் வழக்கமான உடையையே அணிந்திருப்பார்கள். ஆனால் தங்களை அடையாள படுத்திக் கொள்ள ஒரு சிவப்பு நிற மேல் அங்கி (VEST) அணிந்திருப்பார்கள். காண்க படம். இவர்கள் நீல நிற தலைத்துண்டினை (SCARF) வேண்டுமென்றால் அணிந்துக் கொள்ளலாம், அடையாளமாகவும் திகழும். தலைக்குப் பாதுகாப்பாகவும் இருக்கும். இவர்கள் “தீ” என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட சிவப்பு நிற மணிக்கட்டு பேண்ட் (Wrist Band) அல்லது கை பேண்ட் (Arm Band) ஏதாவது ஒன்றை எப்போதும் அணிந்திருப்பார்கள். துஷ்டர்களைத் தொலைவில் நிறுத்தும் இந்த அடையாளம். இவர்கள் பையில் எப்போதும் பெப்பர் ஸ்ப்ரே இருக்கும். ஆபத்து வரும் போது மட்டுமே இவர்கள் இந்த ஸ்ப்ரேவினை பயன்படுத்தலாம்.
இவர்கள் பணி மிகவும் எளிமையானது. யாருக்காவது தொல்லை ஏற்படும் போது அந்தப் பெண் தட்டு ஒலி எழுப்பலாம். மொபைல் மூலம் SMS அனுப்பலாம். “அரவணைக்கும் அன்பு சகோதரிகள்” அங்கு சென்று சுற்றி நின்றாலே போதும். அசம்பாவிதம் ஏதும் நடக்காது. இவர்கள் கடைப்பிடிக்கும் மந்திரம் “ஒவ்வொருவரும் அனைவருக்காக, அனைவரும் ஒருவருக்காக”.