அக்னி ஸ்திரீ (தீ)
(எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் இயக்கத்தின் இணை அமைப்பு)
அக்னி ஸ்திரீ இயக்கம் அறிமுகம்
ALL INDIA ORGANISATION AGNI STREE’s ENGLISH NAME
FIRE IRE
FIRE IRE INTERNATIONAL is a GLOBAL MOVEMENT
for the protection of WOMEN & CHILDREN WORLD OVER and the empowerment and development of WOMEN
+ 91 44 2363 8383 / + 91 98400 34900
exnora@gmail.com
நெருப்புப் பெண்
பெண்களுக்கான இயக்கமானதால் இந்தியாவில் அனைத்து மொழியிலும் பயன்படுத்தப்படும் “அக்னி ஸ்திரீ” என்ற பெயரே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயன்படுத்தப்படும். மொழிப் பெயர்ப்பாக “அக்னி ஸ்திரீ” என்பதன் பொருள் புரியாதவர்களுக்கு விளக்க “நெருப்புப் பெண்” என்று விளக்குவது அவசியம்.
“தீ” என்ற “அக்னி ஸ்திரீ”
பெண்களுக்காகப் பெண்களே நடத்தும் பெண்கள் இயக்கம்
“இந்திரா – இரத்னா எழுச்சி அலை”
பெண்களே! | பெண்கள் பாதுகாப்பு | மதியைப் பயன்படுத்தி |
கூட்டங்களில் இந்நூலைப் படிக்கவும்
முன்னுரை
நம் நாடு பாரம்பரிய பெருமை மிக்க பாரத நாடு. பெண்களை மதித்துப் போற்றும் பண்புடைய நாடு. நம் நாட்டில்தான் பெண் தெய்வங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றனர். வானத்தில் மின்னும் நட்சத்திரங்களைத் தாரகைகள் என்கின்றோம். நிலவைப் பெண்ணாக நினைக்கிறோம்.பெண்ணை நிலவுடன் ஒப்பிடுகிறோம். பெண் குழந்தைகளுக்கு மலர்கள் பெயர்களைச் சூட்டுகிறோம். பெண்களைத் தென்றலுடன், பூங்காற்றுடன் ஒப்பிடுகிறோம். நம்முடைய மொழியைத் தாய்மொழி என்று கூறுகிறோம். நம் நாட்டைத் “தாய்நாடு” என்று சொல்கிறோம். நாம் உயிருடன் இருக்க உதவும் நதிகளைப் பெண்கள் பெயராலேயே அழைக்கிறோம். நம்மை வாழ வைக்கும் நாட்டை “பாரத மாதா” என்று பாராட்டுகிறோம். நம்மைத் தாங்கும் பூமியைப் “பூமாதேவி” என்று பூஜிக்கின்றோம்.
இதற்குக் காரணம் என்னவென்றால் நாம் குறிப்பிட்ட அனைத்துமே நம் வாழ்வின் ஆதாரமாக திகழ்கின்றன. உதாரணம் பூமாதேவி, நதிகள். இவை அனைத்தும் நமக்கு பலவற்றை தருகின்றன. ஆனால் நம்மிடம் இருந்து இவை எதையும் எதிர்பார்ப்பது இல்லை. இவைகள் அனைத்துமே பொறுமையின் சிகரமாக திகழ்கின்றன. ஒரே வார்த்தையில் சொல்வது என்றால் இவை அனைத்தும் தாயுள்ளம் கொண்டுள்ளன.
ஆகவேதான் இவை அனைத்திற்கும் பெண்கள் பெயரைச் சூட்டி மகிழ்கிறோம், போற்றுகிறோம். ஆனால், இப்படி இவைகளுக்கு பெண்கள் பெயரை வைப்பதற்கு காரணமாக இருக்கும் இந்த பண்பாடுகளின் ஒட்டுமொத்த கலவையாகத் திகழும் பெண்களை நாம் எப்படி நடத்துகிறோம். அவர்களிடம் பரிவு காட்டுகிறோமா? அவர்களுடைய கஷ்டங்களை உணர்ந்திருக்கிறோமா? அவர்களுடைய கோணத்தில் பார்க்கிறோமா?
அன்பு, பாசம், கனிவு, விட்டுக் கொடுத்தல், தியாகம் போன்ற பண்புகளின் உறைவிடமாகப் பெண்கள் திகழ்கின்றனர். அவர்கள் குழந்தைகளைச் சுமப்பதோடு மட்டுமல்லாமல் குடும்ப பாரத்தை சுமக்கும் ஆற்றலையும் பெற்றிருக்கின்ற காரணத்தால், மென்மையான பெண்கள் உண்மையில் உள்ளத்தாலும், உடலாலும் உறுதியானவர்களே.
பெண்கள் கண்களில் கண்ணீர்
பெண்களின் மேற்சொன்ன சிறப்புகளெல்லாம் கடந்த கால நிகழ்வுகளால் மாறிவிட்டன. இன்றோ, பெண்கள் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாய் இருக்கிறது. எத்தனை பிரச்சினைகள்? இந்நூலில் வெளியிடப்பட்டிருக்கும் பிரச்சினைகள் பட்டியலைப் பாருங்கள். ஒவ்வொரு பொழுதையும் இவர்கள் கண்ணீரால் நனைத்துக் கொண்டும், கவலையில் மூழ்கிக் கொண்டும் கழிக்கின்றனர். பெண் கண்ணீர் சிந்தினால் அக்குடும்பமே நசிந்து போகும் என்பது கண்கூடான உண்மையாகும்.
காலையில் செய்தித்தாளை எடுத்தால் பெண்களுக்குக் கொடுமை இழைக்கப்பட்ட செய்திகள்தான் எத்தனை? அவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட செய்திகள் எத்தனை? பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படும் பெண்கள்தான் எவ்வளவு பேர்? மங்கையர் பருவத்தில் அடியெடுத்து வைத்த சில நாட்களிலே முகரப்பட்டு, கசக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, எறியப்பட்டு பால் மணம் மாறாப் பருவ மங்கையர்கள்தான் எத்தனை பேர்? வரதட்சணைக்காக வாட்டி வதைக்கப்பட்ட வனிதையர்கள்தான் எத்தனை பேர்?
ஆண்களுக்கிடையே நடைபெறும் சண்டைகள், சச்சரவுகள், ஜாதி, சமயப் போர்கள் ஆகியவற்றில் முதலாவதாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தான். ஒரு பாவமும் அறியாத, சச்சரவுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத பெண் கற்பழிக்கப்படுகிறாள். கொடுமைப்படுத்தப்படுகிறாள், கொல்லப்படுகிறாள்.
நான்கு சுவர்களுக்குள்ளே நரகம்
“ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பது உண்மை. ஒவ்வொரு பெண்ணின் கண்ணீருக்குப் பின்னாலும் ஓர் ஆண் நிற்பது உலகளவு உண்மை”.
மதுப்பழக்கத்துக்கு அடிமையான கணவன்மார்களே பல பெண்களின் துன்பங்களுக்குக் காரணமாகின்றனர். பெண்களே பெண்களின் துயரத்திற்குக் காரணமாக இருக்கிற கொடுமையையும் நாம் பார்க்கிறோம். வாழ்க்கையே போராட்டமாக இருக்கின்ற வேளையில் தங்களின் சொற்ப வருமானத்தையும் மதுவிற்கே செலவழிக்கும் ஆண்களின் இழிந்த நிலையைப் பரவலாகக் காண்கிறோம். மது அடிமைகள் தங்கள் குடும்பத்தை, குழந்தைகளை, பெற்றோரை, உற்றார் உறவினர்களை, இவ்வுலகத்தை ஏன் தங்களையே மறந்துவிடுகின்றனர். மயக்க உலகில் வீழ்ந்து மடிகின்றனர்.
மதி மயக்கும் மதுவின் சதி
குடும்பத்திற்கு எந்தக் கடமையையும், உதவியையும் மது அடிமைகள் செய்வதில்லை. மனைவியைப் பல வழிகளிலும் இவர்கள் துன்புறுத்துகின்றனர். ஏழைகள் குடும்பங்களில் கொடூரம் அதிகம். காசு கொடுக்காமலேயே நல்ல உணவை எதிர்பார்க்கும் கணவன், அது இல்லையென்றால் மனைவிக்கு அவன் தருவது அடி, உதை. சில சமயங்களில் மரணம்.
மதுக்கடைகள் எங்கு பார்த்தாலும் நாட்டைச் சீர்குலைத்து வருகின்றன. மது அருந்துவதால் உடல் மட்டுமின்றி, உள்ளமும் பாதிக்கப்படுகிறது. மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபட முடியாமல் தத்தளிக்கின்றனர்.
“குடிக்க வா” என்று ஊக்கப்படுத்துபவர்கள் பலர். “வேண்டாம், இது அழிவு” என்று கூறுபவர்களோ எவரும் இலர். கணவனின் இத்தகைய நிலையால் மனைவி பெரிதும் போராடுகிறாள். குழந்தைகளைப் படிக்க வைக்க முடியாமல், பாதுகாக்க முடியாமல் திணறுகிறாள். தந்தையின் தவறான காரணத்தால், தன் கண் முன்னாலேயே தன் குழந்தைகள் தீய வழியில் சென்று சமூக விரோதிகளாக மாறுவதைக் கண்டு கண் கலங்குகின்றாள். வழி தெரியாமல் விழிக்கிறாள். அவள் விழிகளில் வழியும் கண்ணீருக்கு என்னதான் விடை?
இதோ விடை :-
மேற்சொன்ன பின்னணியில் பெண்களுக்கு அனைத்து பாதுகாப்பும் தரப்பட வேண்டும் என்ற நோக்கத்துடனும், மது அடிமைகளைத் திருத்தும் எண்ணத்துடனும் “தீ” என்னும் “அக்னீ ஸ்திரீ” என்னும் “பெண்களுக்காகப் பெண்களே நடத்தும் பெண்கள் இயக்கம்” புரட்சிப் புயலாகப் புறப்பட்டுள்ளது என்பதை பூரிப்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். இது அவர்கள் குடும்பத்தை மகிழ்ச்சிப் பூங்காவாக மாற்றி, அன்புறவுத் தென்றலைத் தவழச் செய்வதற்காகவே, இத்திட்டத்தால் மது அடிமைகள் திருத்தப்பட்டு அவர்களிடையே நல்ல ஆரோக்கியமான மாற்றம் உருவாக்கப்படும்.
பெண்கள் பிரச்சினைகள் அனைத்தும் பகலவனைக் கண்ட பனிபோல் “தீ” மூலம் சர்வசாதாரணமாகச் சரி செய்யப்படும். ஒவ்வொரு பெண்ணும் ஒரு சிறந்த மனித சக்தி. பகுதிவாழ் பெண்கள் ஒன்றுசேரும் போது பலம் பெற்று அவர்கள் “அக்னி ஸ்திரீ”யாக “தீ”யாக எழுவார்கள். அதனால் மது அடிமைகளின் மது வேட்கை பொசுங்கிப் போகும். படிப்படியாக ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளால் மது அடிமைகளைத் திருத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பதே “தீ” அமைப்பின் முக்கிய திட்டமாகும். சமுதாயம் இப்பணியில் ஈடுபடுத்தப்படும். “தீ” என்றால் அனைத்து சக்தி, கூட்டுச் சக்தி, ஒன்றுபட்ட சக்தி, ஒற்றுமை சக்தி, திரண்ட சக்தி, சேர்ந்த சக்தி, ஐக்கிய சக்தி.
குறிக்கோள் மற்றும் திட்டங்கள்
அறிவிலும், ஆற்றலிலும், திறமை மிக்க, படித்த பெண்கள் தங்களுக்கென்ற எக்ஸ்னோரா சக்தி அமைப்பை உருவாக்கி அந்த அமைப்பு மூலம் சமுதாயப் பணிகளைச் செய்திட முன் வருகின்ற காரணத்தினால் அவர்களைக் கொண்டு குடிசை, ஏழை மற்றும் கிராமவாழ் பெண்களுக்கு இத்திட்டத்தின் செயல்பாடுகள் விளக்கப்படும்.
கல்வி அறிவு பெறாத பெண்களுக்கு “தீ” அமைப்பின் பணிகள் பெரிதும் உதவுவதாக இருக்கும். மது அடிமைகளை எப்படித் திருத்துவது? என்பது பற்றி குடிசைப் பகுதி பெண்களுக்கு, படித்த “எக்ஸ்னோரா சக்தி” உறுப்பினர்களால் கற்பிக்கப்படும். அல்லது படித்த “தீ” உறுப்பினர்களாலும் நடத்தப்படும். ஏனென்றால் மது ஒரு பிரம்மாண்ட அரக்கன். இந்த அரக்கனை எதிர்கொள்ள அனைத்து சக்திகளும் ஒன்று திரள வேண்டும். சமுதாயத்தில் ஒரு சுகாதாரமான மாற்றத்தை உண்டு செய்யவிருக்கும் இவ்வமைப்பு “தீ” என்று அழைக்கப்படும். இந்த இயக்கத்தின்
“மது அடிமைகளைத் திருத்துதல்”
அற்புதமான, புதுமையான, புரட்சிகரமான அணுகுமுறையால் பெண்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் நடவடிக்கைகளை “தீ” அமைப்பு மேற்கொள்ளும். மங்கையரின் முன்னேற்றத்திற்கு முனைப்புடன் செயல்படும்.
முதல் முக்கியத் திட்டம்
“மது அடிமைகளைத் திருத்துதல்” – ஏன்?
மது அடிமையால் அவன் குடும்பம் மட்டும்தான் பாதிக்கப்படுகிறது என்று யாராவது கருதினால் அது மிகப்பெரிய தவறு.
பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்று பட்டியல் போட்டுச் சற்று ஆராய்ச்சி செய்தால் ஓர் உண்மை புலப்படும். இக்கொடுமைகளை இழைத்தவன், அவைகளை இழைத்தபோது மதுவின் கோரப்பிடியில் அகப்பட்டு மது போதையிலிருந்தான் என்பதே அது. மது அருந்தாமலிருந்தால் அந்தத் தவறைப் பெரும்பாலும் நிச்சயம் அவன் செய்திருக்கமாட்டான். வீட்டிலிருக்கும் பெண்களுக்கு மட்டுமின்றி வெளியே நடமாடும் பெண்களுக்கும் இன்னல்கள் ஆண்மகனால் எப்போது இழைக்கப்படுகிறது என்றால், அவன் மது போதையில் இருக்கும்போதுதான். அளவுக்கு அதிகமாகக் குடித்த பிறகு அவன் அவனில்லை.
- எந்த ஏந்திழைக்கும்
- எப்போதும் எங்கேயும்
- எவராலும் எப்படிப்பட்ட ஆபத்து
- எவ்வாறு எதற்காக
- எங்கேயிருந்து வரும் என்பதை எவரும் எண்ணிப் பார்க்க முடியாது, எடுத்துரைக்கவும் முடியாது.
ஆனால் ஆபத்துகள் மது அடிமைகளால் அதிகம் வரும் வாய்ப்புகள் உண்டு என்பதை மனதில் பதிவு செய்து வைத்துக் கொள்வது முக்கியம்.
உதாரணத்திற்கு சாலை விபத்துக்களை எடுத்துக் கொள்வோம். தினந்தோறும் செய்தித்தாள்களில் சாலை விபத்துக்களைப் பற்றிப் படிக்கிறோம். நேரடியாகவே பார்க்கிறோம். கொலை செய்பவன் கூடத் தூக்கு மரத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் காலம் இது. ஆனால் ஒரு தவறும் செய்யாத மனிதர்கள் நம்நாட்டில் சாலை விபத்தில் அநியாயமாகக் கொல்லப்படுகிறார்கள். புள்ளிவிவரம் கூறுவது என்னவென்றால், தமிழ்நாட்டில் மட்டும் ஒருநாளைக்கு உயிர்களைப் பறிக்கும் விபத்துகள் முப்பதாவது ஏற்படுகின்றன. அதாவது ஒருமணிக்கு ஓர் உயிர் இழப்பு என்ற விகிதத்தில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்பதே செய்தி.
இதில் சரிபாதி சாலை விபத்துகளில் இரண்டு வண்டிகள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும்போது காரணத்தை ஆராய்ந்தால் ஒரு வண்டி ஓட்டுனர் நிச்சயம் மது போதையிலிருந்தார் என்பது தெரியவரும். மரத்தின் மீது வண்டி மோதி ஓட்டுனர் இறக்கும் விபத்துகளிலும் சரிபாதி மது அருந்தியதால் ஏற்பட்ட விபத்தாகவே இருக்கும்.
சாலைகள் போர்க்களங்களாக, கொலைக்களங்களாக மாறுவதற்கு மது முக்கியக் காரணம் அல்லது மது அதிகமாக அருந்திய ஓட்டுனர் வண்டியைத் தான் ஓட்ட முடியாத நிலையில் கிளீனரை வைத்து வண்டி ஒட்டச் செய்வதும் விபத்துக்கு இன்னொரு காரணம். எப்படிப் பார்த்தாலும் சாலை விபத்துகளின் வில்லன் மது. (“தீ” அமைப்பின் உறுப்பினர்கள் அவசியம் கூட்டமாக தங்கள் ஊர் காவல் நிலையத்திற்குச் சென்று வண்டி ஓட்டுபவர்களை மது அருந்தியிருக்கின்றார்களா? என்ற சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்க சொல்ல வேண்டும்.)
கற்பழிப்பு, வன்செயல், சச்சரவு, ஆயுதங்களால் தாக்குதல் போன்ற எந்தத் தவறான, நன்னெறிக்குப் புறம்பான செயல்கள் நடக்கும் போதும் குறைந்தது 50% சம்பவங்களில் தீய செயல் புரிந்த மனிதனை உள்ளிருந்து இயக்குவது மதுவாகத்தான் இருக்கும்.
ஆகவே மது அடிமைகளைத் திருத்தும் ”தீ” அமைப்பின் செயல்திட்டம் ஏதோ மது அடிமைகளின் குடும்பத்தைச் சார்ந்த பெண்களுக்கு மட்டுமே என்று மற்ற பெண்கள் கருதக்கூடாது.
வேறு குடும்பத்தைச் சார்ந்த மது அடிமையால், ஏன் எந்த மது அடிமைகளாலும் தங்களுக்கே ஆபத்து எப்போதும் வரலாம் என்பதை உணர்ந்து அனைவரும் சேர்ந்து மது அடிமைகளை ஆக்கப்பூர்வமான செயல்களால் திருத்த ”தீ” அமைப்பு மூலமாக முழு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
தீ” – பெயர் விளக்கம்
பெண்களின் ஒற்றுமை ஏன் அவசியம்?
மனிதன் தன் ஆறாவது அறிவால் மிருகங்களிடமிருந்து வேறுபடுகிறான். சிந்தனை, சொல், செயல் இம்மூன்று திறமைகளுமே அவனை அனைத்து மிருகங்களிடமிருந்து மாறுபட்ட இந்த உலகத்தையே ஆட்டிப்படைக்கும் சக்தியாக மாற்றி இருக்கின்றன. ஆணுக்கு பெண் சளைத்தவள் இல்லை. பெண்கள் வெற்றி முத்திரையை எங்கும் காணலாம். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஓசைப்படாமல் ஒரு பெண் ஒளிந்திருப்பது உண்மை.
ஆனால் இன்று பெண் பல தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுகிறாள். அதனை எதிர்கொள்ளும் மனவலிமை இருந்தாலும், உடல் வலிமை அவளுக்குக் குறைவு. ஆகவே, பெண்கள் அனைவரும் ஒன்று சேரும் போது கடலைப் போன்று, காற்றைப் போன்று, சூரிய ஒளியைப் போன்று சர்வ வல்லமை.
படைத்த சக்தியாக மாறுவார்கள். பலம் பெறுவார்கள். நடைபாதையில், சந்தில், வீதியில், கிராமத்தில், நகரத்தில், மாநிலத்தில், நாட்டில் இருக்கும் அனைத்துப் பெண்களும் “தீ” அமைப்பின் மூலம் ஒன்றாக இணைவார்கள். இனிய வீட்டை உருவாக்குவார்கள். சிறந்த நாட்டை உண்டாக்குவார்கள்.
தனி மல்லிகை மொட்டால் பயன் குறைவு. ஆனால் மல்லிகை மொட்டுகள் சரமாகத் தொடுக்கப்படும்போது அதற்கு மதிப்பு உண்டாகும். சரமாக மாறும் மல்லிகை மொட்டுகள் பெண்கள் கூந்தலில் சூட்டப்பட்டு அவர்கள் அழகை அதிகப்படுத்துகின்றன. தொடுக்கப்படும் மல்லிகை மொட்டுகள், மனிதனைக் கௌரவிக்கும் மாலையாக மாறுகின்றன. ஏன் மாலையான மலர்கள் கடவுளின் கழுத்தையே சென்றடைகின்றன.
பெண்களும் அப்படித்தான். ஒன்று சேரும் போது அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும், கௌரவமும் உண்டாகின்றன, கூடுகின்றன. அவர்களை ஒன்று சேர்க்கும் நார்தான் ”தீ” என்கிற ”அக்னி ஸ்திரீ” அமைப்பு. தொடுக்கப்படாத மல்லிகை மொட்டுகள் மண்ணில் விழும், மிதிக்கப்படும், காற்றில் பறந்து கழிவுக் கால்வாயில் விழும். அதேபோன்றுதான் மற்ற பெண்களுடன் ஒன்று சேராமல் தனியாக இருக்கும் பெண் ஒன்று சேரும் பெண்கள் உயர்வார்கள். ஊராரால் மதிக்கப்படுவார்கள்.
“ஒரு பெண் கல் தடுக்கி கீழே விழலாம். ஆனால் ஒன்றுபட்ட பெண்களோ மலையையே நகர்த்தி விடுவார்கள். ஒரு பெண் காற்றடித்தால் கீழே விழுந்துவிடலாம். ஆனால் ஒன்றாக சேர்ந்த பெண்கள் காற்றின் திசையையே திருப்பி விடுவார்கள்.”
ஆம்! பெண் உடல் வலிமை குறைந்தவளாக இருக்கலாம். ஆனால், பெண்கள் ஒன்றுபடும் போது அனைத்து வலிமையும் பெற்று அவர்கள் சர்வசக்தியாக மாறுவார்கள்.
ஒவ்வொரு பெண்ணும் ஒரு நீர்த்துளியாக இருக்கலாம். ஆனால் சில துளிகளாக அவர்கள் அனைவரும் ஒன்று சேரும் போது, “பல துளி பெரு வெள்ளம்” ஆகிக் கடலாக மாறுவார்கள்.
ஒரு பெண் மூட்டை பூச்சி போல் நசுக்கப்படலாம். ஆனால் அனைத்து பெண்களும் ஒன்றாக சேரும் போது அவளைச் சுற்றி மனித சுவராக மாறும்போது அவள் கற்கோட்டையாகிறாள். உலகப் பெண்களில் இருந்து ஊர்ப் பெண்கள் வரை, அனைவரும் ஒன்று சேர ஒரு சிறந்த வழி ”தீ”அமைப்பு. அவர்கள் இனம், நிறம், மொழி, மதம், ஜாதி, பொருளாதாரம் ஆகிய எல்லைகளைக் கடந்து “பெண்களாகிய நாங்கள் ஒன்று” என்ற உணர்வுடன் ஒன்றுபட வேண்டும்.
“நாம் அனைவரும் பெண்கள், நாம் நன்றாக இருந்தால்தான் நம் வீடும், நாடும் சிறக்கும்” என்ற உணர்வு அவர்களுக்கு வர வேண்டும். ஆகவே அனைத்து வித்தியாசங்களையும் கடந்து நாங்கள் பெண்கள் என்ற அடிப்படையில் ஒன்று சேர்வோம். ஒருவருக்கொருவர் உதவுவோம். ஒத்துழைப்போம்” என்று நினைத்துச் செயல்பட்டால் போதும். நிலைமை தலைகீழாக மாறிவிடும். நன்மைகள் பெருகும்.
“தீ” என்ற பெயருக்கு காரணம் இந்த இயக்கம் காட்டுத் தீ போல் எட்டுத்திக்கிலும் பரவ வேண்டும் என்பதே. இரண்டாவதாக, ஆனால் முக்கியமாக, பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பொசுக்கும் ”தீ”யாய் ”தீ” அமைப்பு திகழ வேண்டும்.
பெண்கள் முதலில் தங்கள் அறியாமையை அறிவுடைமைத் “தீ”யால் பொசுக்க வேண்டும். அதேபோன்று தங்கள் தன்னம்பிக்கையின்மையையும் தன்னம்பிக்கைத் ”தீ”யினால் கொளுத்த வேண்டும்.
தங்களை முடக்கும் மூட நம்பிக்கைகளை அவர்கள் முடக்க வேண்டும். தங்களை அழிக்கும், நசுக்கும், ஒடுக்கும், ஒரங்கட்டும், தாழ்த்தும், ஈனப்படுத்தும், தீயோர் எண்ணங்களைத் தீயில் கருக வைக்க வேண்டும்.
பெண்கள் ஒன்றுசேரும் போது உருவாகும் ஒற்றுமைத் ”தீ” தீய எண்ணங்கள் கொண்டவர்களைத் தூரத்தில் பய உணர்வோடு நிச்சயம் நிறுத்தும். அவர்களை நெருங்கும், தவறான எண்ணங்களை நொறுக்கும். கயமை குணம் கொண்ட ஆண்கள் புரிந்துக் கொள்வார்கள், பெண்ணைத் தொட்டாலே கைசுடும் என்று.
இன்று பெண்களைக் கொல்லப் பயன்படுத்தும் ஆயுதம் ”தீ”. வரதட்சணைக் கொடுமை காரணமாக, குடிகாரக் கணவனின் போதை காரணமாக அவள் உயிரைக் கொடூரமாகப் பறிப்பது ”தீ”. கி.பி.2011ம் ஆண்டில் மட்டும் நம் நாட்டில் வரதட்சணைக்காகத் தீ வைத்துக் கொல்லப்பட்ட பெண்கள் எண்ணிக்கை ஒன்பதாயிரம். தீக்கிரையாக்கப்படும் அவளே தீயாக மாறிவிட்டால்…..!
பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடினான், ”மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமையைக் கொளுத்துவோம்”. என்று. பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்ட பாரதி பயன்படுத்திய வார்த்தைகள் “கொளுத்துவோம்”. அதன் பொருள், பெண்கள் இழிவுப்படுத்தப்படும் நிலை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே. “தீ”யின் முக்கியத்துவத்தை உணர்வுப்பூர்வமாகப் பாரதியே கூறிவிட்டான். அவன் வார்த்தைகளின் வெப்பம் இப்போதும் தகிக்கிறது. மாதர்கள் கொளுத்தப்படுவதை இன்று பார்த்தால் பாரதி என்ன எழுதுவானோ?
கோவலன் கொல்லப்பட்டதால், கண்ணகி கோபப்பட்ட போது அவளுடைய சினம் தீயாய் மாறியது. கொடியவர்களைக் குடை சாய்த்தது. விஷமிகளை வேரோடு வீழ்த்தியது. தீயவர்களைத் தீண்டி எரித்தது. அதனால்தான் தீங்கு விளைவிக்க நினைப்பவர்களுக்கு “தீ” எ ழுத்து அபாய அறிவிப்பாக இருக்க வேண்டும். அதனால்தான் இந்த அமைப்பின் பெயர் ”தீ”.
“தீ” என்ற வார்த்தை சுற்றியிருக்கும் ஆபத்துகளை எச்சரிப்பதாகவும் இருக்கும். தன்னம்பிக்கையையும், துணிவையும் தொடர்ந்து தருவதாகவும் இருக்க வேண்டும்.
“தீ” – சின்னம்
”தீ” சின்னம் – ”கொழுத்து விட்டெரியும் தீப்பந்தம்”. அதை இரண்டு கரங்கள் பற்றியிருக்கின்றன. பந்தத்தைப் பற்றியிருக்கும் கைகள் பெண்களுடையவை. உற்று கவனித்தால்தான் தெரியும், பெண்கள் பற்றியிருக்கும் தீப்பந்தத்தின் தண்டு ஆணின் கை. தீப்பந்தம் ஏன்?
இருட்டில் செல்லும் பெண்ளுக்கு அது வழிகாட்டும், இருட்டில் இருக்கும் பெண்களெல்லாம் தீப்பந்தத்தினுடைய ஒளியால் வெளியே வெளிச்சத்திற்கு வரலாம். ”தீ” அமைப்பு ஒரு தீப்பந்தம் போன்றது. சோகத்தில் மூழ்கியிருக்கும் பெண்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தச் செய்யும்.
“தீ” எதிர்நோக்கி அழிக்க வரும் தீய எண்ணங்களை, தீய பார்வைகளைப் பொசுக்கிவிடும். பெண் கரங்கள் ஏனென்றால் இது “பெண்களுக்காக, பெண்களே நடத்தும் பெண்கள் இயக்கம்”. கரங்கள் அனைத்துப் பெண்களின் பிரதிநிதிகளாக ”தீ”ப் பந்தத்தைப் பற்றியிருக்கின்றன.
ஆண் கை எதற்கு? அதாவது கைப்பிடியே ஆணின் கை. “தீ” அமைப்பு ஆண்கள் எதிர்ப்பு இயக்கம் அல்ல. பெண்கள் ஆண்களை ஒதுக்கித் தங்கள் குறிக்கோளில் வெற்றி பெற முடியாது. ஆண்கள் 90% நல்லவர்களே. பிரச்சினைகளே எஞ்சியுள்ள பத்து சதவிகிதத்தினால்தான் உண்டாக்கப்படுகிறது.
ஆக ஆண்கள் உதவியைப் பெறுவது அவசியம். இருகை தட்டினால்தான் ஓசை. இரண்டு தண்டவாளங்கள் இருந்தால்தான் இரயில் ஓடும். ஆண்களுக்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்துத் தங்கள் இயக்கத்தின் கரங்களாக ஆண்களைப் பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். “தீ” அமைப்பிற்கு உதவ நிறைய ஆண்களை உறுப்பினர்களாகக் கொண்ட இணை அமைப்புகளில் ஆண்கள் பங்கு பெறுவார்கள். பெண்களுக்கு முழுமனதோடு உதவுவார்கள்.
”தீ நண்பர்கள்” “தீ பாதுகாப்பு பறக்கும் படை”, “தீ சான்றோர்கள்” ஆகிய அமைப்புகளில் ஏதாவது ஒன்றிலாவது உறுப்பினராகச் சேர்ந்து ஆண்கள் பணியாற்ற வேண்டும். பணியாற்றுவதும் அவசியம். அப்படிப் பணியாற்றினால், வீடும், நாடும் நிச்சயம் நலம் பெறும். ஊரும் உலகமும் உருப்படும். “தீ” அமைப்பிற்கு சகல ஆதரவையும் அவர்கள் மனமுவந்து தரவேண்டும். இப்பணிகளை ஆற்ற ஆண்களைப் பயன்படுத்திக் கொள்வது “தீ”யின் கடமையாகும்.
”தீ” இயக்கத்தினுடைய ஆதாரமே ”தீ”தான். தீயின்றி உண்ண முடியாது. சூரியன் மூலம் வரும் வெளிச்சம் கிடையாது. அதுமட்டுமல்ல, வீட்டில் எரியும் விளக்குக்கூட கரியைக் கொளுத்தி அதனால் உருவாகும். “தீ”யால்தான் நமக்கு வெளிச்சம் கிடைக்கிறது. ஆக, வெறும் ”தீ”யை நம் இயக்கத்தின் சின்னமாக காட்ட முடியாது. அந்த ”தீ” எங்கிருந்தாவது வர வேண்டும். அதுவும் ஒரு ஆக்கப்பூர்வமான பயனைத் தர வேண்டும். இங்கு நீங்கள் காண்பது ”தீ” பந்தம். இந்தப் பந்தம் எரியும் பொழுது அந்த நெருப்பு வெளிச்சத்தைத் தருகிறது. ஆகவே “தீ” பந்தம் “தீ” இயக்கத்தின் சின்னமாக நாம் பயன்படுத்தலாம் என்று கருதினோம். ஆனால் ”தீ” பந்தத்தை பலரும் பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்துகிறார்கள்.
“தீ” இயக்கம் பெண்களுக்கான இயக்கம். அதை பெண்கள் மட்டுமே நடத்திவிட முடியாது. ஆண்களின் துணை அவசியம் தேவை. ஆக, இந்த வெளிச்சம் தரும் ”தீ” பந்தத்தை ஆணும், பெண்ணும் சேர்ந்து பிடிக்கிறார்கள். இதன் பொருள் என்னவென்றால் ஆணை ஒதுக்கிவிட்டு இந்த இயக்கம் நடத்தப்படக்கூடாது. இணைந்துதான் செய்ய வேண்டும். அந்த மூன்றாவது கை யாருடையது? ஒரு குழந்தையுடையது. அந்த குழந்தையின் கை இங்கு நீங்கள் காண்பதற்கு பல காரணங்கள். ஆணும், பெண்ணும் அந்தக் குழந்தைக்காக தியாகங்கள் பல செய்ய வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை நினைவுப்படுத்ததான்.
அதுமட்டுமல்ல, இன்றைய குழந்தை நாளைய மனுஷி. பெரியவர்களைத் தொடர்ந்து அந்த குழந்தை அந்த “தீ” பந்தத்தை தாங்கி செல்ல வேண்டும் என்பதற்காகவே இது.
“தீ” சின்னத்தை எங்கெல்லாம், எதற்கெல்லாம், எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம்?
|
|
- அவர்களுடைய சட்டையில் குத்திக் கொள்ளும் பேட்ஜ்.
- அமைப்பின் சிவப்பு நிறக்கொடியில் இச்சின்னம் நிச்சயம் இடம்பெறும்.
- ஒவ்வொருவரும் அவர்கள் வீட்டிற்கு முன் சுவற்றில் இச்சின்னத்தை அவசியம் பொறித்திருக்க வேண்டும்.
- ஒரு பகுதியில் நிறைய இல்லங்களில் இச்சின்னம் காணப்பட்டால் அது ”தீ” அமைப்பின் வலிமையைக் காட்டும்.
- கட்சிக் கொடிகள், ரசிகர் மன்றக் கொடிகள் எல்லாம் பலர் வீட்டிலே ஏற்றி வைக்கிறார்கள். ஆனால் இது பெண்களுக்காக பெண்களே நடத்தும் இயக்கம். இச்சின்னம் அவசியம் அனைத்து இல்லங்களிலும் வெளியே வரையப்பட்டிருக்க வேண்டும்.
- இதுமட்டுமின்றி கை பைகளிலும் அச்சடித்திருக்க வேண்டும்.
- “தீ” சின்னத்தைப் பெயர் பலகைகள், அடையாள அட்டைகள், விளம்பரங்கள், சுற்றறிக்கைகள் அனைத்திலுமே பயன்படுத்த வேண்டும். இந்த அடையாளத்தைப் பார்த்தாலே அது ”தீ” இயக்கத்தை நினைவூட்டுவதாக இருக்க வேண்டும். உறுதியையும், ஊக்கத்தையும், உற்சாகத்தையும், உத்வேகத்தையும், ஒற்றுமையையும் உலகளவிற்கு ஒட்டுமொத்தமாக அளிப்பதாக இச்சின்னம் இருக்கும்.
துஷ்டர்களைத் தூர நிறுத்தும். கயவர்களைக் கண்டிக்கும். பெண்களுக்குக் கேடு செய்ய நினைப்பவர்களுக்குப் புறமுதுகிட்டு ஓடச் செய்யும்.
“மது அருந்துபவர்கள்”, “மது அடிமைகள்” வித்தியாசம் (Difference between Drinking and Becoming Drunkard)
“மது அருந்துவதே குற்றமா?” என்ற விவாதம் எவராலும் என்றென்றும், எங்கெங்கும், எப்போதும் நடந்து வருகிறது. மேல்நாடுகளில் மது அருந்துவது ஒரு பழக்க-வழக்கம். ஏன் நாகரிகம் கூட. ஆனால், அங்கே மது அருந்துபவர்களில் கணிசமானவர்கள் மது தங்களை அழிக்க விடுவதில்லை. தங்களுக்குள்ளே ஒரு வரையறை வைத்துக் கொள்கிறார்கள். மது அருந்துவதற்கு அளவு வைத்துக் கொள்கிறார்கள். அது ஒரு பொழுதுபோக்கு. மற்றவர்களுடன் நட்பை வளர்த்துக் கொள்ள ஒரு வழி. ஒரு சாதனம்கூட. கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள மது அருந்துவதை அவர்கள் ஒரு சாக்காக வைத்துக் கொள்கிறார்கள். ஒரு வண்டியை எடுத்துக் கொண்டு நான்கு பேர் ஒன்றாக விருந்துக்குப் போனால், ஒருவர் மது அருந்தமாட்டார். அவர் வண்டியை ஓட்டுவார். ஒவ்வொருவருக்கும் அவர்கள் “மது அருந்தாமல் இருந்து கார் ஓட்டும் முறை” வரும். மது அருந்தியவர்கள் கார் ஓட்ட மேல் நாட்டில் அனுமதியில்லை. மது அருந்தி ஓட்டினால் கடுமையான தண்டனை வழங்கப்படும். நம் நாட்டிலும் அப்படிப்பட்ட சட்டங்கள் இருந்தாலும், சரிவர அவை அமல்படுத்தப்படுவதில்லை.
சாலை மனித உயிர்களை விழுங்கும் கொலைக்களமாக மாறுவதற்குக் காரணம், ஏராளமானவர்கள் மது அருந்தி மது போதையில் வாகனங்களை ஓட்டுவதே. இதனால் சாலையைப் பயன்படுத்தும் அப்பாவி மக்கள் உயிர் துறப்பதைத் தினந்தோறும் பார்க்கிறோம். நம் நாட்டிலும் சுய கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பவர்கள் மது அருந்துபவர்களிடையே உண்டு.
அங்கும் சரி, இங்கும் சரி, “மது அருந்துபவர்கள்” வேறு, ”மது அடிமைகள்” வேறு. “மது அடிமை” என்ற வார்த்தைக்குப் பொருள் என்னவென்றால், இவர்கள் மதுவால் தங்களையே இழந்தவர்கள், இவர்கள் மதுவை நிர்வகிக்கவில்லை. மது இவர்களை நிர்வகிக்கிறது. இவர்களுக்கு மதுவைக் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதை அருந்தவில்லையென்றால், இவர்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடும், உயிரே போய்விடும்.
மது அருந்தி அருந்தி மதுவுக்கு அடிமையாகிவிட்ட இவர்கள் மூளை மழுங்கிச் சிந்திக்கும் திறன் இழந்து செயலிழந்து போய்விடுகின்றனர்.
மது அடிமையாக மாறுபவர்கள்
- மனிதப் பண்புகளைக் கோட்டைவிடுகின்றனர்.
- வாழ வைக்கும் தொழிலைத் தொலைக்கின்றனர்.
- மன அமைதியை இழக்கின்றனர்.
- மனநலம் பாதிக்கப்படுகின்றனர்.
- உடல்நலத்தை ஒழிக்கின்றனர்.
- பாசத்தைத் துறக்கின்றனர்.
- நட்பை நட்டாற்றில் விடுகின்றனர்.
- குற்றங்கள் புரிகின்றனர்.
- தண்டனை பெறுகின்றனர்.
- ஆபத்துக்குள்ளாகின்றனர்.
- இறுதியில் உயிரையே இழக்கின்றனர்.
இவர்களுக்குள்ளே இரண்டு மனிதர்கள். மது அருந்தாதபோது சாத்வீக குணம், அருந்திய பிறகு பேய்க்குணம்.
இவர்களால் இவர்களுக்கும் நஷ்டம், வீட்டுக்கும் நஷ்டம், ஊருக்கும் நஷ்டம், நாட்டுக்கும் நஷ்டம். இவர்களைச் சமாளிக்க, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, கட்டுப்பாட்டிற்கு உட்படுத்த ஏராளமான காவலர்கள் தேவைப்படுகின்றனர். இவர்கள் செய்யும் குற்றங்களை விசாரிக்க நீதிபதிகள் தேவைப்படுகின்றனர். இவர்களை அடைக்க நிறைய சிறைச்சாலைகள் கட்டப்பட வேண்டியுள்ளது. இவர்களால் ஏற்படும் விபத்துகளால் உயிர் இழப்பு, தொடர்ந்து காப்பீட்டுக் கழகங்களுக்குப் பண இழப்பு என்பது நாள்தோறும் நடக்கும் ஒன்று. நாட்டுக்கு மட்டுமின்றி, வீட்டிற்கு ஏராளமான விரயத்தை இவர்கள் உண்டாக்குகிறார்கள். தாங்களும் வாழ்வதில்லை, மற்றவர்களையும் இவர்கள் வாழவிடுவதில்லை. இவர்கள் கவலைகளை மறக்க மது அருந்துகின்றனர். ஆனால், ஒரு தவறும் செய்யாத குடும்பத்தினரின் கவலையை இவர்கள் மது அருந்தி அதிகமாக்குகின்றனர்.
“தீ”யின் குறிக்கோள்
மது அடிமைகளை முழுமையாகத் திருத்துவதற்காக இருக்க வேண்டும். அதைவிட முக்கியமாக மது அருந்துபவர்கள் மது அடிமைகளாக மாறாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
கள்ளச்சாராயம் (IIIicit Liquor)
மது இருக்கலாமா? கூடாதா? மது அடிமைகள் ஆகாமல் கட்டுப்பாட்டுடன் மது அருந்துவதில் என்ன தவறு? போன்ற விவாதங்கள் நான்கு திசைகளிலும் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
எது எப்படியிருந்தாலும் கள்ளச்சாராயம் என்பது இருக்கக்கூடாதது, ஒழிக்கப்பட வேண்டியது. எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. கள்ளச்சாராயத்தைப் பொருத்தவரை “கள்ளச்சாராயம் அருந்துபவர்கள்”, “கள்ளச்சாராய அடிமைகள்” என்று வித்தியாசம் பார்க்க முடியாது. ஏனென்றால் சிறிதே கள்ளச்சாராயம் அருந்துபவர்கள் கூட அதில் இருக்கும் விஷத்தன்மையால் இறந்துவிடுவதை, அவர்கள் உடல் உறுப்புகள் செயலற்று முடங்கிவிடுவதை, கண் பார்வையை இழப்பதை கண்கூடாகக் காண்கிறோம். செய்தித்தாளில் அடிக்கடி படிக்கிறோம்.
“நாம் உண்ணும் எந்த உணவையும் அதில் என்ன இருக்கிறது? எப்படித் தயாரிக்கப்பட்டது?” என்பதை ஓரளவு அறிந்து நம்பிக்கையுடன் உண்கிறோம். சாராயம் அருந்துபவர்களுக்குச் சாராயம் எப்படி, என்னென்ன பொருள்களால் தயாரிக்கப்படுகிறது என்பது எதுவும், எவருக்கும் தெரியாது. தெரிந்திருந்தாலும் விளைவுகளைப் பொருட்படுத்தாமல் குடிப்பவர்களும் உள்ளனர். கள்ளச்சாராயம் விற்பவர்களும் அதைக் கூறுவதில்லை.
சாராயம் காய்ச்சுபவர்கள் சாராயம் தயாரிக்கப் பல விஷத்தன்மை வாய்ந்த பொருட்களை வேண்டுமென்றே பயன்படுத்துகின்றனர். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் அது அதிக போதை தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அதில் பாட்டரி மற்றும் உயிரைக் குடிக்கும் இரசாயனப் பொருள்கள், அழுகிய பழத்தோல்கள், மரப்பட்டைகள், ஆர்.எக்ஸ்.பவுடர் ஆகியவற்றைக் கலந்து காய்ச்சுகிறார்கள். சாராயம் குடிப்பவர்களோ இன்னும் “கிக்” வேண்டுமென்று ஸ்பிரிட், வார்னீஷ் ஆகியவற்றைக் கலந்து தங்கள் மரணக்குழியைத் தாங்களே தோண்டிக் கொள்கிறார்கள். இதனால் பல நோய்களுக்கும் உபாதைகளுக்கும் இவர்கள் உள்ளாகி, வீழ்ந்து, இழிந்து, அழிந்து, ஒழிந்துவிடுவதைப் பார்க்கிறோம், படிக்கிறோம்.
கள்ளச்சாராயம் என்பது இன்று, நேற்றல்ல. மனிதன் பிறந்ததிலிருந்தே தொன்றுதொட்டு இருந்து வருகிறது. பூரண மதுவிலக்கு நம்நாட்டில் அமலில் இருந்த காலத்திலேயே கள்ளச்சாராயம் இருந்தது. இது நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது என்பதுதான் அச்சத்தைத் தருகிறது. இனி இந்நிலை இருக்காது. ஏனென்றால் இதுவரை சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள், அருந்துபவர்கள் மட்டுமே ஒன்றுசேர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறார்கள். இந்நாள் வரை பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்று சேரவில்லை. இவர்களை ஒன்றுபடுத்துவதுதான் ”தீ” அமைப்பு. பெண்கள் ஒன்று சேர்ந்தால் கள்ளச்சாராயம் ஒதுக்கப்படும், ஒழிக்கப்படும், ஓரங்கட்டப்படும், ஓடஓட விரட்டப்படும்.
”தீ” இயக்கம் உள்ள ஊர்களில் கள்ளச்சாராயத்திற்குத் துளியும் இடமில்லை என்ற நிலையை உண்டாக்க உறுப்பினர்கள் உறுதி மேற்கொள்ள வேண்டும். செயல்பட்டு வெற்றி காண வேண்டும்.
”ஒன்று சேர்ந்த சிறுபான்மை, ஒன்று சேராத பெரும்பான்மையை விட வலிமையானது”. (Organised Minority is much stronger than unorganized majority). பெரும்பான்மையினர் ஒன்று சேர்ந்தால் என்னவாகும்? கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் ஒரு சிலரே. பெண்கள் ஒன்று சேர்ந்து அணிதிரண்டால் பெரும்பான்மையினராக மாறுவார்கள். மாபெரும் வலிமை பெறுவார்கள். அதனால் ஏற்படும் நல்விளைவுகளைப் பற்றி விவரிக்க வேண்டுமா? ஒன்று சேர வேண்டும் என்ற எண்ணமே மகிழ்ச்சியைத் தரவில்லையா? செயல்பாடு இன்பம் தருமே! செய்க. பெண்களே! உடன் செய்க! ஒய்வின்றிச் செய்க! ஒற்றுமையுடன் செய்க!
விதி விலக்கு (Exception)
பெண்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள்
நிலவிலே கரும்புள்ளிகள் உண்டு. நற்பண்புகள் உடைய பெண்கள் ஏராளம் என்றால், தீய குணங்கள் கொண்ட பெண்கள் சிலர் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. தீயவைகள் செய்யும் பெண்கள் பலவகையினர்.
- வேண்டுமென்றே செய்பவர்கள்.
- வேறு வழியில்லாமல் செய்பவர்கள்.
- நல்வழி தெரியாமல் செய்பவர்கள்.
பெண்களாலேயே பெண்களுக்குத் தீங்கிழைக்கப்படுவதுதான் ஜீரணிக்க முடியாத ஒன்று. ஒவ்வொரு ஊரிலும் சில பெண்கள் செய்யும் தவறான காரியங்கள்தான் எத்தனை?
சாராயம் குடிக்கும், காய்ச்சும், விற்கும் பெண்கள். விபச்சாரத் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தும் பெண்கள். மருமகளைக் கொடுமைப்படுத்தும் மாமியார். மாமியாரைக் கொடுமைப்படுத்தும் மருமகள். பெண் சிசுக்களைக் கொல்லும் பாட்டிகள், திருடுபவர்கள், கலப்படம் செய்பவர்கள், பதவியைப் பயன்படுத்தி லஞ்சம் சம்பாதிக்கும் பெண்கள், ரவுடிகளாக செயல்படும் பெண்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்களும் திருத்தப்பட வேண்டியவர்களே. இவர்களுக்கு மனமாற்றம் ஏற்பட ”தீ” அமைப்பு சகல நடவடிக்கைகளையும் நேரிடையாகவே மேற்கொள்ளும். முடியவில்லை என்றால் சட்டப்பூர்வமாக, சட்டத்திற்குட்பட்ட, சகல நடவடிக்கைகளையும் நிச்சயம் எடுக்கும்.
ஆண்களுக்குத் தீங்கிழைக்கும் பெண்கள்
ஆண்கள் மீது பொய்யான புகார்கள் கொடுக்கும் பெண்கள் உண்டு. பிடிக்காத கணவன் மீது பொய்யான வரதட்சணைப் புகார் கொடுக்கும் பெண்கள் உண்டு. அப்போது “தீ” அமைப்பு தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்துத் துன்பத்திற்குள்ளாக்கப்படும் ஆண்களுக்குத் துணையாக நிற்கும்.
இது நிஜமாக நடந்த ஒன்று. அவர் ஒரு மத்திய அரசு ஊழியர். திடீரென்று டெல்லியில் இருந்து ஒரு தகவல். தேசியத்தலைவர் இறந்துவிட்டார். ஆகவே, அலுவலகத்திற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மாலை 6.00 மணிக்கு செல்பவர் அன்று மதியம் 1.00 மணிக்கே வீடு திரும்பிவிடுகிறார். வீட்டிற்கு சென்று கதவைத் தட்டுகிறார். அவர் மனைவி வந்து கதவை திறக்கவில்லை. ஆகவே வீட்டிற்கு பின்புறம் சென்று அங்கு படுக்கை அறையின் ஜன்னலைத் திறக்கிறார். அங்கு அவர் கண்ட காட்சி, அவருடைய மனைவி இன்னொருவருடன் படுக்கையில். இவர் பார்த்ததை அவர் மனைவி பார்த்துவிடுகிறார். அவளுக்கு புரிகிறது. தன்னுடைய தவறு தன் கணவனுக்கு தெரிந்துவிட்டது என்று. உடனே அவள் முந்திக் கொள்கிறாள். காவல்நிலையத்திற்கு சென்று தன்னுடைய கணவரும், மாமியாரும், கணவரின் மூன்று இளைய சகோதரிகளும் வரதட்சணைக் கேட்டு துன்புறுத்துவதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும் புகார் கூறுகிறார். உடனே அந்த அரசு ஊழியர், அவருடைய தாயார், சகோதரிகள் கைது செய்யப்படுகிறார்கள். காவலர்களால் கைது செய்யப்பட்டதால் அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார்.
மூன்று ஆண்டுகள் நரகம். பிறகு தன்னுடைய மனைவியின் நடத்தையைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறார். அவருக்கு பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கின்றன. தன் மனைவி ஒழுக்கமற்றவர், திருமணத்திற்கு முன்னாலேயே பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்தார் போன்ற தகவல்களைத் திரட்டி தன் மீது போடப்பட்ட பொய் வழக்கிலிருந்து விடுபட அவருக்கு மூன்று ஆண்டுகள் பிடிக்கின்றன. ஆனால் துயரமான விஷயம் என்னவென்றால் இப்பொழுது வயது அவருக்கு 58. அவருடைய இளைய சகோதரிகளுக்கு 45-லிருந்து 54 வரை. அவர் மறுபடியும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அவருடைய மூன்று இளைய சகோதரிகளுக்கும் பொய் குற்றச்சாட்டால் திருமணமே நடக்கவில்லை. கன்னிகளாகவே தங்கள் தலைவிதியை நொந்து தங்கள் காலத்தை கழித்து வருகிறார்கள்.
மேற்சொன்ன சம்பவங்கள் போன்று நாள்தோறும் ஏதாவது ஒன்று நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் “தீ” அமைப்பின் நிர்வாகிகளின் பொறுப்புகள் அதிகமாகிறது. அவர்கள் எப்பொழுதுமே உணர்ச்சி வசப்படக்கூடாது. கண்ணால் பார்த்து, காதால் கேட்டு, தீர விசாரித்த பிறகே அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நிரபராதிகள் என்றுமே தண்டிக்கப்படக்கூடாது. இதற்கான சத்தியப்பிரமாணத்தை “தீ” அமைப்பு உறுப்பினர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆக, நல்ல ஆண்கள், கெட்ட பெண்களால் பாதிக்கப்படும் போது அந்த ஆண்களுக்குப் பாதுகாப்புத் தருவதும் “தீ” அமைப்பின் மிக முக்கிய கடமை ஆகும். பெண்கள் செய்வது அனைத்தும் சரியானதே. ஆண்கள் செய்வது அனைத்தும் தவறானதே என்று ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வது முறையல்ல. அத்தகைய பாகுபாடு “தீ” அமைப்பிற்கு கிடையாது. அது நீதியாகாது. தர்மம் ஆகாது. அந்நிலையில் அத்தகைய ஆண்களுக்கு “தீ” அமைப்பு சிறப்புச் சேர்க்கும். பெருமையை பெருக்கும். நடுநிலை, நல்ல நிலை ஆண்களில் பெரும்பான்மையோர் ஒழுக்கமானவர்கள், நல்லவர்கள். ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல், நல்லவர்களிடையே கயவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சிறுபான்மையினரே. அதே போன்று தீயகுணங்கள் கொண்ட பெண்களின் எண்ணிக்கையும் குறைவானதுதான்.
மனிதர்கள் மதியைப் பயன்படுத்தி |